வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (08/10/2017)

கடைசி தொடர்பு:02:30 (08/10/2017)

கோவை காவல் நிலையத்தில் விநாயகர் கோயில்: விதிகளை மீறும் அரசு

கோவை, சாய்பாபா காலனி, சி-3 காவல்நிலையத்தில், கட்டப்பட்டுள்ள விநாயகர் கோயிலால் சர்ச்சை எழுந்துள்ளது.

காவல் நிலையத்திற்க்குள் இருக்கும் விநாயகர் கோயில்

அரசு அலுவலகங்களில், வழிபாட்டுத் தலங்கள் எதுவும் அமைக்கக் கூடாது என்பது தமிழக அரசின் விதிகளில் ஒன்று. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த விதியை மீறி தற்போது பெரும்பாலான அரசு அலுவலகங்களில் வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவை, சாய்பாபா காலனி, சி-3 காவல்நிலையத்தில் விநாயகர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் உள்பட எந்த ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலங்களும் அமைக்கப்படக் கூடாது என்பது தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த உத்தரவு காற்றில் பறந்துள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாட்ட நிர்வாகக் குழுவின் அஸரஃப் அலி கூறுகையில், "காவல் நிலையம் மட்டுமல்ல, நீதிமன்றங்கள், அரசு மருத்துவமனைகளிலும் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்து மதத்தின் கோயில்கள் மட்டுமல்ல, எந்த ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலங்களும் கட்டப்படக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் விதி. சி-3 காவல் நிலையத்தைப் போலவே, கோவை ஜி.சி.டி (அரசு தொழில்நுட்பக் கல்லூரி) அருகே உள்ள அரசு இடத்திலும் ( அரசு வேளாண் பல்கலைக்கழகத்துக்குச்  சொந்தமான இடம்) கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2011-ல் அ.தி.மு.க அரசு பதவியேற்றப் பிறகுதான் அரசு அலுவலகங்களில் கோயில் கட்டுவது அதிகரித்து வருகிறது. அதற்கு முன்பு அப்படி இல்லை" என்றார்.