"ஊழலை விவாதிக்க வாங்க..!" கிரண்பேடி அழைப்பால் அலறும் புதுவை அமைச்சர்கள் | " lets discuss corruption" KiranBedi invites Pondy ministers

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (08/10/2017)

கடைசி தொடர்பு:19:40 (08/10/2017)

"ஊழலை விவாதிக்க வாங்க..!" கிரண்பேடி அழைப்பால் அலறும் புதுவை அமைச்சர்கள்

 

கிரண்பேடி

சுவாரஸ்யமான  சாட்சியங்களைப் பார்க்க அமைச்சருக்கு கிரண்பேடி அழைப்பு!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிரடி நடவடிக்கைகளால் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கே சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டனி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகக் கிரண்பேடியை நியமித்தது மத்திய பி.ஜே.பி. அரசு. அன்றிலிருந்து இன்றுவரை நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே கடுமையான அதிகார மோதல் நிலவி வருகிறது. மாநில அரசுமீது பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்களைப் பகிரங்கமாகத் தெரிவித்து வருகிறார் கிரண்பேடி. இந்நிலையில், அரசு விழா ஒன்றில் பேசிய சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி, “புதுச்சேரிக்குத் திறமையான முதல்வர் கிடைத்தும் அவரால் செயல்பட முடியவில்லை. இலவச அரிசி, மாணவர் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட மக்களுக்கான எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் நான் ஏன் அமைச்சராக இருக்க வேண்டும்? அதனால், என் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று நம் முதல்வரிடம் தெரிவித்தேன். மேலும், வருகிற 2018-ம் ஆண்டுக்கான புதுச்சேரி அரசு டைரியில் என்னுடைய பெயர், புகைப்படம், எனது துறைகள் உள்ளிட்ட எந்தத் தகவலும் இடம்பெறக்கூடாது என்றும் அவரிடம் கடிதம் கொடுத்திருக்கிறேன். துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைத் திரும்பப்பெறக் கோரி வருகிற ஜனவரி மாதம் டெல்லி லோக்சபா முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து நாம் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டோம். ஆனால், கவர்னர் கிரண்பேடியிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற போராட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். கவர்னரின் சதித்திட்டத்தை முறியடிக்க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் பொதுமக்களும் துணைநிற்க வேண்டும்” என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

கந்தசாமி

''அமைச்சர்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது!”

அதே விழாவில் பேசிய முதல்வர் நாராயணசாமி, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார் என்றால், அந்தப் பதவி தேவையா? மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஆனால், ‘சி.பி.ஐ-க்குச் கோப்புகளை அனுப்பிவிடுவேன்’ என்று அதிகாரிகளை அழைத்து ஆளுநர் மிரட்டுவதால், அவர்கள் கடமையை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டுகின்றனர். தற்போதுள்ள ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அதனால் அமைச்சர்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது” என்று தெரிவித்தார்.

“உண்ணாவிரதத்துக்கு முன் ராஜ்நிவாஸுக்கு வாருங்களேன்!”

அதையடுத்து அமைச்சர் கந்தசாமிக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடிதம் ஒன்றை அனுப்பி பரபரப்பைக் கூட்டியிருக்கிறார் கிரண்பேடி. அந்தக் கடிதத்தில், “டெல்லியில் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கச் செல்லும் முன் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸுக்கு வாருங்கள். எப்போது வேண்டுமானாலும், எந்த நேரமானாலும் இங்குவந்து விவாதிக்கலாம். அப்போது மிக முக்கியமான, அதேசமயம் பல சுவாரஸ்யமான  சாட்சியங்களைக் காட்டுவேன். மத்திய விஜிலென்ஸ் மற்றும் சி.பி.ஐ-க்கு அனுப்புவதற்கு முன் அந்த ஆதாரங்களை உங்களுக்குக் காட்ட ஆசைப்படுகிறேன். அமைச்சர் அதைப் பார்த்தால், புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். அமைச்சர் யாருக்காகப் பேசுகிறாரோ, அதற்கு நேர்மாறாக அவரது துறையில் முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மைக்காகச் சரியான முறையில் எடுக்காத முடிவுகளைச் சரி செய்துகொள்ளலாம்.  ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வேறு திட்டங்களுக்காகச் செலவிடப்பட்டதைத் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத்தலைவரிடம் ஏற்கெனவே கூறியிருக்கிறேன்” என்று அதில் தெரிவித்திருக்கிறார் கிரண்பேடி.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்