Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நலிந்த நிலையில், 'நந்தனார் அரசு பள்ளி'... தமிழக அரசின் கவனத்துக்கு!

சுவாமி சகஜனந்தா

'நூற்றாண்டைக் கடந்த 'நந்தனார் அரசு பள்ளி'யை அழிவிலிருந்து காத்து, அதை வரலாற்று பொக்கிஷமாகப் பாதுகாக்க அரசு முன்வரவேண்டும்'' என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

    'கல்வி ஒன்றுதான் அனைவரையும் தலைநிமிர வைக்கும் மிகச்சிறந்த ஆயுதம்' என்ற கொள்கை கொண்டவர் சுவாமி சகஜானந்தா. தமிழ் பற்றாளரும், ஆன்மீகவாதியுமான இவர் கடந்த 1911 ஆம் ஆண்டு, கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் மூன்று பேருக்காக ஓமக்குளம் மடத்தில், திண்ணைப் பள்ளிக் கூடம் ஒன்றைத் தொடங்கினார். 

"ஆடு, மாடு மேய்த்தாலாவது ஒருவேளை கஞ்சி கிடைக்கும். நீங்க கூட்டிக்கிட்டுப் போனால், என்ன கிடைக்கும்" என்று அச்சிறுவர்களின் பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து அப்பள்ளிக்கு மாணவர்களைச் சேர்க்கும் தீவிர முயற்சியில் இறங்கினார் சகஜானந்தா. நாளடைவில் திண்ணைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்தது.

     இதுகுறித்து, சுவாமி சகஜானந்தாவின் பேரனும், நந்தனார் கல்விக்கழகச் செயலாளருமான ஜெயச்சந்திரன் பேசுகையில், "ஓமக்குளத்தில் மட்டுமல்ல, கிள்ளை, நஞ்சமகத்துவாழ்க்கை, கொடிப்பள்ளம், பன்னப்பட்டு போன்ற பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், திண்ணைப் பள்ளியை நடத்தி வந்துள்ளார். கடந்த 1923 ஆம் ஆண்டு சுவாமி சகஜானந்தா, நந்தனார் பெயரில் கல்விக் கழகம் ஒன்றைத் தொடங்கினார். இக்கல்விக்கழகத்தின் நோக்கமே, ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி வளர்ச்சியில் முன்னேற வேண்டும் என்பதுதான். அதற்காக விடுதி வசதியோடு தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிவரைத் தொடங்கினார். பின்னர் அதனை அரசாங்கத்திடமே ஒப்படைத்தார். முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன் இப்பள்ளியில், சுமார் ஏழாயிரம் மாணவர்களுக்கு மேல் படித்தார்கள். ஆனால், இப்போது ஆயிரம் மாணவர்கள்கூட படிக்கவில்லை. இதுதான் இப்போதைய பள்ளியின் நிலை. அரசு இப்பள்ளியைக் கண்டுகொள்ளாமல் விட்டதால், இப்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. கட்டிடங்கள் எல்லாம் விரிசல் அடைந்து, சேதமாகிக் கிடக்கிறது. இவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில், அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

    சிதம்பரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் சகஜானந்தாவுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்தார். அதன்பிறகு 1.40 கோடி நிதி ஒதுக்கி மணிமண்டபம் கட்டி முடிச்சாச்சி. ஆனால், அது திறக்கப்படாமல் கிடப்பதுதான் வருத்தமாக உள்ளது" என்றார்.

நந்தனார் பள்ளி

இப்பள்ளியின் முன்னாள் மாணவரான பாலையா, "பெண் கல்வியே கூடாது என்று கருதிய 1920-ல், 20 மாணவிகளைக் கொண்டு தொடக்கப்பள்ளியைத் தொடங்கினார் சுவாமி சகஜானந்தா. இதில் மதுரை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்மாள்தான் முதல் பெண் மாணவி. முன்னாள் அமைச்சர் ராஜாங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மருதூர் ராமலிங்கம், வானூர் மாரிமுத்து, சீர்காழி மணி, புதுச்சேரி முருகேசன், அரூர் அன்பழகன், ஐ.ஏ.எஸ். தங்கராஜ் என பலரும் இப்பள்ளியில் படித்தவர்கள்தான். இப்பள்ளியின் பெருமையினைக் கண்டு, மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி, முத்தையா செட்டியார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், பக்தவச்சலம், கருணாநிதி, ஜனாதிபதிகள் கிரி, நீலம் சஞ்சீவி ரெட்டி, விஞ்ஞானி ஜி.டி.நாயுடு ஆகியோர் இப்பள்ளியைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இப்பள்ளிக்கு மகாத்மா காந்தி, காமராஜர், கக்கன் ஆகியோர் புதிய கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். அப்போது, இப்பள்ளியின் கல்வித் தரத்தைப் பார்த்து தமிழகத்தின் பல பகுதியிலிருந்து வந்த மாற்று சமூகத்தினரும் இப்பள்ளியில் சேர்ந்து, விடுதியில் தங்கி படித்துள்ளனர். 

மணிமண்டபம் மட்டுமே அவரின் கொள்கையை நிறைவேற்றாது. தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில், இப்பள்ளிக்கு அரசு முன்னுரிமை கொடுத்து, நூற்றாண்டு விழாவை நடத்தி வரலாற்றுப் பொக்கிஷமாகப் பாதுகாக்கவேண்டும்" என்றார்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் வடநேரேவிடம் பேசினோம், "இப்பள்ளி சம்பந்தமாக மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் முழுமையாக ஆய்வுமேற்கொள்வதோடு, உரிய நடவடிக்கையையும் விரைவில் எடுக்கிறேன்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement