''பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய - மாநில அரசுகள்  குறைக்க வேண்டும்!'' - ராமதாஸ் கோரிக்கை!


ராமதாஸ்

பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு உயர்த்திய கலால் வரியையும் தமிழக அரசு உயர்த்திய மதிப்புக் கூட்டு வரியையும் உடனடியாகக் குறைக்க வேண்டும்'' என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெட்ரோல், டீசல் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அவற்றின்மீதான கலால் வரியை இரண்டு சதவிகிதம் குறைத்த மத்திய, மாநில அரசுகளும் மதிப்புக்கூட்டு வரியை ஐந்து சதவிகிதம் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதை ஏற்று குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள்கள் மீதான மதிப்புக் கூட்டுவரியைக் குறைத்துள்ள நிலையில், தமிழக அரசு அமைதிகாப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த மூன்று ஆண்டுகளில், மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து அதிகரித்த வரியைக் குறைத்தாலே... பெட்ரோல் விலை லிட்டருக்கு 15.77 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 15.47 ரூபாயும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வரிக்குறைப்பைச் செய்ய அரசுகள் மறுக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் உயர்த்தப்பட்ட வரியைக் குறைப்பதால், அவற்றுக்குப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படப்போவதில்லை. எரிபொருள்கள் மீதான மதிப்புக்கூட்டு வரி, கலால் வரியில், மாநில அரசின் பங்கு ஆகியவற்றின் மூலம் தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.26.48, டீசல் விற்பனைமூலம் ரூ.18.26 வருவாய் கிடைக்கிறது. பெட்ரோலின் உற்பத்திச் செலவைவிட அதிகமாக மதிப்புக்கூட்டு வரியை மாநில அரசு வசூலிப்பது எந்த வகையிலும் முறையானதோ, நியாயமானதோ அல்ல. எனவே, பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் உயர்த்திய கலால் வரியையும், தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் உயர்த்திய மதிப்புக்கூட்டு வரியையும் உடனடியாகக் குறைக்க வேண்டும். இதன்மூலம் எரிபொருள்களின் விலை 22 சதவிகிதம் வரை குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அதில் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!