''டெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்!'' - தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்!

தமிழிசை சவுந்தரராஜன்

''டெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்''  எனத் தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக பி.ஜே.பி. சார்பில், சென்னை டி.பி.சத்திரம் அருகே உள்ள காமராஜர் நகரில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது.  அதில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கிப் பேசிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் வி‌ஷக்காய்ச்சல் இருக்கிறது. தமிழக அரசு இதை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். சாதாரண மருத்துவமனைகளில் கூட காய்ச்சல் வார்டுகளைத் தொடங்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் வி‌ஷக் காய்ச்சல் வார்டுகள் தொடங்கப்பட வேண்டும். தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறினாலும், இப்போது உள்ள நோயின் வீரியத்துக்குப் போதுமானதாக இல்லை. டெங்கு காய்ச்சலுக்கு சுகாதாரமின்மையே காரணம். உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவக் காரணம். டெங்குக் காய்ச்சலை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டு வரவேண்டும். பொதுமக்களும் காய்ச்சல் வந்தால் இரண்டு மூன்று நாள்களில் குணமாகிவிடும் என்று இருந்துவிடாமல், ஆரம்ப நிலையிலேயே அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!