தற்கொலையா, மாரடைப்பால் உயிரிழந்தாரா? ஶ்ரீதர் மரணத்தில் தொடரும் சர்ச்சைகள்!

ஸ்ரீதர் காஞ்சிபுரம்

ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதாக வந்த தகவலை அடுத்து பரபரத்துக் கிடக்கிறது காஞ்சிபுரம். ஸ்ரீதர் இறந்துவிட்டார் என்ற தகவலை அவரது வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன்தான் மீடியாக்களுக்கு உறுதிசெய்தார். அவர் கம்போடியா கிளம்புவதற்கு முன் "ஸ்ரீதர் கம்போடியாவில் தங்கி இருக்கிறார். இரவு 8.30 க்கு என்னிடம் பேசினார். நான் தற்கொலை செய்துகொண்டால் என் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டார். அப்படியெல்லாம் பேசாதீங்கன்னு நான் ஆறுதல் கூறினேன். சிறிது நேரம் கழித்து ஸ்ரீதர் இறந்துவிட்டதாக உதவியாளர் தேவேந்திரன் கூறினார்" என பேட்டி கொடுத்துவிட்டுச் சென்றார்.

அந்த வழக்கறிஞருடன் ஸ்ரீதரின் மகள் தனலட்சுமியும் கம்போடியா சென்றார். லண்டன் சென்றிருந்த ஸ்ரீதரின் மகன் சந்தோஷ் குமாரும், அங்கிருந்து கம்போடியா சென்றார். ஸ்ரீதருக்கு காவல் துறையின் ரெட்கார்னர் நோட்டீஸ் இருப்பதால், போலி பாஸ்போர்ட்டில் கம்போடியா சென்றிருக்கிறார். இந்த நிலையில் ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டு வர அவரது வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஸ்ரீதர் இறப்பு சான்றிதழ்

போலி பாஸ்போர்ட்டில் ஸ்ரீதர் கம்போடியா சென்றிருப்பதால் அவரது உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இரு நாட்டு தூதரகத்திலிருந்தும் அதற்கான அனுமதி பெறவேண்டும். அந்த வேலைகளைப் பார்ப்பதற்காக கம்போடியாவில் இருந்து 6-ம்தேதி இந்தியா திரும்பினார் ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி. இந்தியாவுக்கு ஸ்ரீதரின் உடலைக் கொண்டு வர மாவட்ட ஆட்சியர் மற்றும் காஞ்சிபுரம் எஸ்.பி. ஆகியோருக்கு மனு கொடுக்க வழக்கறிஞர்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார் தனலட்சுமி. மாவட்ட ஆட்சியர் பொன்னையா அலுவலகப் பணி காரணமாக வெளியே சென்றிருப்பதால் DRO செளரிராஜனிடம் அந்த மனுவை கொடுத்தார். மேலும், எஸ்.பி. அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த மனுவில், ‘என் தந்தை ஸ்ரீதர் மீது சில குற்ற வழக்குகள் இருக்கின்றன. அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் 2016-ல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் எங்கிருக்கிறார் என எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் தெரியாது. இந்நிலையில், அவர் உடல்நிலை சரியில்லாமல் கம்போடியாவில் உள்ள கீமா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக  லண்டனில் இருக்கும் எனது சகோதரர் சந்தோஷ் குமார் தெரிவித்தார்.  தகவல் கிடைத்ததும் நாங்கள் கம்போடியாவில் உள்ள கீமா மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கே அவர் இறந்த நிலையில் இருந்தார். அவரது உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு செய்வதற்காக அவரது உடலை இந்தியா கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவுடன் அவரின் இறப்புச் சான்றிதழையும் இணைத்திருந்தார். ஆனால், அந்த இறப்புச் சான்றிதழில் இதய அடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக கிமா மருத்துவமனை சான்று அளித்துள்ளது. முன்னுக்குப் பின் முரணான தகவல் அளிக்கப்பட்டிருப்பதால் ஸ்ரீதர் தற்கொலை செய்து இறந்ததாக வந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தநிலையில் காவல் துறையினர் ஸ்ரீதர் இறந்துவிட்டார் என்பதை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஸ்ரீதர் வெளிநாட்டில் கொடுத்த சான்றிதழை வைத்துக்கொண்டு வழக்கை முடித்தால் விசாரணை அதிகாரிக்கு பிற்காலத்தில் பிரச்னை எழக்கூடும். காவல்துறையினர் வசமிருக்கும்  ஸ்ரீதரின் பயோமெட்ரிக் ஆவணங்களை கம்போடியா கொண்டு சென்று ஸ்ரீதரின் பிரேதத்துடன் ஒத்துபோகிறதா என உறுதி செய்ய வேண்டும். ஆனால், அவ்வளவு செலவு செய்து காவல்துறையினர் கம்போடியா செல்ல மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை. ஸ்ரீதர் தரப்பில் செலவு செய்துதான் காவல்துறையினரை கம்போடியா அழைத்துச் செல்ல முடியும். ஸ்ரீதரின் உடலைக் கொண்டுவர மத்திய அரசு சம்மதித்தாலும், போலி பாஸ்போர்டை ஊக்குவிப்பதாக அமையும். அதனால் ஸ்ரீதர் உடலைக் கொண்டுவருவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏராளம்.

கம்போடியாவில் காசு கொடுத்தால் எதையும் செய்துவிடலாம். சட்டம் ஒழுங்கும் சொல்லிக்கொள்ளும்படியாக  இல்லை. அதே நேரத்தில் இந்திய பணம் அங்கு தாராளமாக புழங்கும். இந்த நிலையில், அங்கு பெறப்பட்ட இறப்புச் சான்றிதழ் கேள்விக்குரியது என்று சொல்கிறார்கள். கைரேகை, டிஎன்ஏ உள்ளிட்டவற்றை சோதனைசெய்து உறுதிப்படுத்தியபிறகுதான் இறப்புச்சான்றிதழை நீதிமன்றத்தில் காவல்துறையினர் சமர்ப்பிப்போம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

4-ம் தேதி இரவு ஸ்ரீதர் இறந்ததாக மகள் தனலட்சுமிக்கு தகவல் கிடைக்கிறது. 5-ம்தேதி கம்போடியா சென்று 6-ம் தேதியே இறப்பு சான்றிதழ் வாங்கிக் கொண்டுவந்து, 7-ம் தேதி காலையில் மாவட்ட ஆட்சியரை பார்த்திருக்கிறார். இவ்வளவு விரைவாக டிக்கெட் எடுத்துச் சென்று வந்திருப்பது ஏற்கெனவே திட்டமிட்டு செய்த செயலா என சந்தேகத்தைக் கிளப்புகிறது. அதே வேளையில் 4-ம் தேதி ஸ்ரீதர் இறந்ததாக தகவல் வந்ததும் கூட்டாளிகள் மொத்தமாக செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்தது ஏன் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. 

ஸ்ரீதர் உடல் இந்தியா வருமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!