Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ஏன் அப்படிப் பேசினார் அமைச்சர் செல்லூர் ராஜூ?’ - சசிகலாவை வம்புக்கு இழுக்கும் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

 சசிகலா

Chennai: 

தினகரனை வம்புக்கு இழுத்து வழக்கில் சிக்கவைக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வியூகம் அமைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சசிகலா, தினகரனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உளவுத்துறை போலீஸார் உன்னிப்பாகக் கண்காணித்துவருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சைபெறும் தன் கணவர் நடராசனைச் சந்திக்க ஐந்து நாள்கள் பரோலில் வந்துள்ளார். கடந்த 7, 8 ஆகிய தேதிகளில் நடராசனைச் சந்தித்தார். மருத்துவமனையில் சைகைமூலம் இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையிலிருந்து நேற்று வீடு திரும்பிய சசிகலா, உறவினர்களிடம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 
சசிகலா அருகில் திவாகரனின் மகன் ஜெயானந்த் இருந்துவருகிறார். தினகரனுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், ஜெயானந்துக்கு சசிகலா கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், ஜெயானந்திடம் சில அசைன்மென்ட்டுகளைச் சசிகலா கொடுத்துள்ளார். அதில், அ.தி.மு.க-வில் தங்களின் உண்மையான ஆதரவாளர்களின் பட்டியலைச் சேகரிக்கும்படி சொல்லப்பட்டுள்ளதாம். அந்தப் பட்டியல் கிடைத்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கையில் களமிறங்கலாம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பதிலடிகொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. சசிகலா கொடுத்த அசைன்மென்ட்டை உடனடியாக ஜெயானந்த் செயல்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார். அ.தி.மு.க-வில், சசிகலா ஆதரவாளர்களின் பட்டியல் சேகரிக்கும் பணிகள் ரகசியமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

தினகரன்

ஏற்கெனவே, தம்பிதுரை எம்.பி., அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர், சசிகலாவுக்கு ஆதரவாக சில கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசியது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் செல்லூர் ராஜூவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பதிலைக் கேட்டு, கோரிக்கை வைத்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தரப்பினர், "பரோலில் வந்துள்ள சசிகலா மூலம் சிக்கல்கள் வரும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கருதினர். ஆனால், தி.நகர் வீட்டிலிருந்து பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனைக்குச் செல்வதில் மட்டுமே சசிகலா கவனம் செலுத்துவதாக வெளியில் தெரிந்தாலும், உறவினர்களிடம் கலந்துரையாடி அவர் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். இந்தத் தகவல் சசிகலாவின் உறவுகள்மூலம் எங்களுக்குத் தெரியவந்தது. இதனால், சசிகலா வெளியிலிருக்கும் ஒவ்வொரு நாளும் அவருக்கு எதிராகப் பேசியவர்களுக்குச் சிக்கல் ஏற்படும் என்ற பயம் எழுந்துள்ளது.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆ

மேலும், தினகரன் ஆரம்பத்திலிருந்தே எடப்பாடி பழனிசாமி அணியில் எங்களது ஸ்லீப்பர் செல் இருப்பதாகத் தெரிவித்துவந்தார். தற்போது, சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவைத் தங்களது ஸ்லீப்பர் செல் என்று தினகரன் அணியினர் தெரிவித்துள்ளனர். இது, அமைச்சர் செல்லூர் ராஜூவுக்குச் சிக்கலை ஏற்படுத்தியது.  'நான், ஸ்லீப்பர் செல் இல்லை' என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சால் அ.தி.மு.க-வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதைச் சமாளிக்க செல்லூர் ராஜூவுக்கு எதிராகப் பேசியவர்களிடம் சாதுர்யமாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் பேசியுள்ளனர்.

அப்போது, 'சசிகலாவுக்குச் சிக்கல் ஏற்படுத்தவே, செல்லூர் ராஜூவைப் பேசவைத்தோம். அவரது பேச்சுக்குப் பிறகு சசிகலா தரப்பினர் ஏதாவது பேசுவார்கள். அதைவைத்து சசிகலா, தினகரனுக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம்' என்று கூறி, செல்லூர் ராஜூவுக்கு எதிராகப் பேசியவர்களின் வாயை அடைத்துள்ளனர். இதனால், செல்லூர் ராஜூ மீது கோபத்திலிருந்தவர்கள் அமைதியாகியுள்ளனர். சசிகலாவின் விசுவாசிகளாக இருந்த அமைச்சர்கள் மூலமே சசிகலா, தினகரன் ஆகியோருக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் கொடுக்க கொங்கு மண்டல அமைச்சர்கள் டீம் முடிவுசெய்துள்ளது" என்றனர். 

 எடப்பாடி பழனிசாமி தரப்பு விரிக்கும் வலையில் சசிகலா, தினகரன் சிக்குவார்களா என்பதுதான் அ.தி.மு.க-வில் இன்றைய ஹாட் டாப்பிக்காக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement