'போஷிகாவுக்காக அமைதியாக இருக்கிறேன்' - மனம்திறக்கும் தாடி பாலாஜி  

பாலாஜி,  நித்யா

 ''என்னுடைய மகள் போஷிகாவுக்காக அமைதியாக இருக்கிறேன்'' என்று நடிகர் பாலாஜி தெரிவித்தார். 


 நடிகர் தாடி பாலாஜிக்கும் அவர் மனைவி நித்யாவுக்கும் இடையே நடந்துவரும் கருத்துவேறுபாடு, நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. ஃபேஸ்புக் பக்கத்தில், தாடி பாலாஜி தொடர்பாக வெளியான ஒரு வீடியோ வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், பாலாஜி குறித்த பல தகவல்களை அவரின் மனைவி நித்யாவும் மகள் போஷிகாவும் பேசுவதாக இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவரும் நேரத்தில், பாலாஜியைத் தொடர்புகொண்டு பேசினோம்.

"குடும்ப விஷயத்தை வெளியில் சொல்வதே தவறு. அதுவும் வீடியோவாக வெளியிட்டு, ஒட்டுமொத்த குடும்ப மானத்தையும் நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிட்டார் நித்யா. எனக்கும் நித்யாவுக்கும் ஏற்பட்ட தகராறு, எல்லா வீடுகளிலும் நடப்பதுண்டு. ஆனால், பிரபலங்கள் வீடுகளில் நடக்கும் பிரச்னைகள் மட்டும் பரபரப்பாகிவிடுகின்றன.

நித்யாவும் நானும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். என்னுடைய மகள் போஷிகா எனக்கு உயிர். நிம்மதியாகச் சென்ற எங்களது வாழ்க்கையில் திடீரென புயல் வீசத் தொடங்கியது. மற்றவர்களைச் சிரிக்கவைக்கும் நான், மனதளவில் அழுது கொண்டிருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையைச் சிரிக்கவைத்துவிட்டார் நித்யா. என்மீது பல குற்றச்சாட்டுகளை நித்யா கூறியபோதிலும், பொறுமையாகத்தான் இதுவரை இருக்கிறேன். அதற்குக் காரணம் போஷிகா. அவருக்காக அமைதியாக இருக்கிறேன்.

மாதவரம் போலீஸ் நிலையத்தில் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக என்மீது நித்யா புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் என்னை விசாரித்தனர். அந்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சாதி பார்க்காமல் காதலித்துக் கரம்பிடித்த நித்யாவை நான் எப்படி சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவேன். அதில் எந்தவித லாஜிக்கும் இல்லை.

என்னைக் குடிகாரன் என்று சொல்லி நித்யா அசிங்கப்படுத்துகிறார். நான் குடிகாரன்தான். குடிப்பழக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீள முயற்சிசெய்துவருகிறேன். என்னை இரண்டு நாள் சிறையில் தள்ள வேண்டும் என்று நித்யா ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை. தற்போது, நான் பிச்சை எடுக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அது நடக்காது. போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகு சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை. தற்போது, என்னைப் பழிவாங்குவதாக நினைத்து, ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், எந்தளவு என்னை தரம்தாழ்த்தி அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். கணவன்-மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்னைகளை வீடியோவாக வெளியிடுவது குடும்பப் பெண்ணுக்கு அழகல்ல.

 நித்யாவைக் குறைசொல்ல என்னிடம் 1,000 விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும் அமைதியாக இருக்கிறேன். அந்த வீடியோவில், போஷிகாவைக் கட்டாயப்படுத்தி எனக்கு எதிராகப் பேசச் சொல்கிறார் நித்யா. அவர் செய்யும் தவறுகளுக்கு, அவரின் பெற்றோரும் உடந்தையாக இருக்கின்றனர். என்னால் ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும். தொடர்ந்து என்னைக் குறித்து அவதூறு கருத்துக்களை நித்யா தெரிவித்துவந்தால், நானும் மீடியா முன்பு உண்மைகளைச் சொல்ல வேண்டியதிருக்கும்" என்றார். 

 நித்யா

 உங்களிடமிருந்து விவாகரத்து பெற நித்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதே? 

 ''விவாகரத்து தொடர்பாக எனக்கு எந்தவித தகவலும் நீதிமன்றத்திலிருந்து வரவில்லை. என்னுடன் சேர்ந்து வாழ அவருக்கு விருப்பமில்லை என்றால், அதை சட்டரீதியாக எதிர்கொள்ள நானும் தயாராக உள்ளேன்.'' 

 ஃபேஸ்புக்கில் வலம் வரும் வீடியோகுறித்து என்ன சொல்கிறீர்கள்?

 ''அந்த வீடியோ, என்னைப் பழிவாங்குவதாக நினைத்து, நித்யா தன்னைத்தானே அவமானப்படுத்தியிருக்கிறார். போஷிகா விவரம் தெரியாத குழந்தை. அவள் வளர்ந்த பிறகு, இந்த வீடியோவைப் பார்த்தால் அவளது மனநிலை என்னவாகும் என்ற சிந்தனை நித்யாவுக்கு இல்லை. வீடியோ எடுக்கப்பட்ட தினத்தில், நித்யாவின் நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கவில்லை. இதனால், கோபத்தில் அவ்வாறு பேசினேன். அதை வீடியோவாக வெளியிடுவது முறையல்ல. என்னிடம் நித்யா தொடர்பான ஆவணங்கள் இருக்கின்றன. தேவைப்படும்போது அதை வெளியிடுவேன்.''  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!