ஊக்கத்தொகைக் குறைப்பு - சிக்கலாகும் ஜவுளித் தொழில்

                    ஜவுளி வியாபாரம்

வுளி ஏற்றுமதியாளர்களையும், உற்பத்தியாளர்களையும் ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரி பூதம் பூமிக்குள் அழுத்துவதாக சம்பந்தப்பட்டவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்நிலையில், ''எங்கள் தொழிலை மேலும் நசுக்கும்விதமாக, எங்களுக்கு வழங்கி வந்த 9 விழுக்காடு ஊக்கத்தொகையைக் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து 2 விழுக்காடாகக் குறைத்திருக்கிறது மத்திய அரசு. இதனால்,எங்கள் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதோடு, வெளிநாட்டு ஆர்டர்களை முடிக்க முடியாமல் தவிக்கிறோம்'' என்று மீன் முள் தொண்டையில் மாட்டியதுபோன்ற அவஸ்தையில் துடிக்கிறார்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதியாளர்கள்.

வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில், கரூர் மாவட்டம் ஏக பிரசித்தி பெற்றது. சர்வதேச தரத்துக்கு வீட்டு உபயோக ஜவுளிகள் இங்கு உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக ஜவுளிகளான திரைச்சீலை, கால் மிதியடி, மெத்தை விரிப்பு, கையுறை, துண்டு ஆகியவை ஆஸ்திரேலியா, அமெரிக்கா, டென்மார்க், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன்மூலம், ஆண்டு ஒன்றுக்கு 3000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. 

இந்த ஜவுளித் தொழிலில், கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். ஆனால், மத்திய அரசின் கொள்கை முடிவுகளால், இந்தத் தொழில் சமீபத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலையற்ற நூல் விலை, ஜி.எஸ்.டி, ஒருங்கிணைந்த சாயப்பட்டறைகள் இல்லாதது போன்ற பிரச்னைகள் கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த 9 விழுக்காட்டு ஊக்கத்தொகையை அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து வெறும் 2 விழுக்காடாகக்  குறைக்க, வெளிநாட்டு ஏற்றுமதியை முடிக்க முடியாமல் சிரமப்படுவதாகக் கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


 ஜவுளி வியாபாரம்

 

இதுபற்றி, நம்மிடம் பேசிய மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை உறுப்பினரும், கரூர் ஏற்றுமதியாளருமான ஸ்டீபன்பாபு,

"நாடு முழுவதும் கடந்த ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதில் 12 முதல் 28 விழுக்காடு வரை ஜவுளி பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டது. மேலும், விலைப்பட்டியலில் ஆரம்பித்து சரக்கைக் கப்பலில் ஏற்றுவது வரை பல சிக்கலான நடைமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. சரக்கைக் கப்பலில் ஏற்றும்போது வங்கிக்கான பாதுகாப்புப் பத்திரத்தை சுங்க வரித்துறையினர் கேட்கின்றனர். இதுகுறித்து வங்கியில் கேட்டால், அதுபோன்ற நடைமுறையே இல்லை என்று கைவிரிக்கின்றனர். இந்தப் பிரச்னை எங்க தொழிலைக் கடுமையா பாதித்திருக்கிறது.

இதற்கே இன்னும் விடிவு கிடைக்கவில்லை.... அதற்குள் அடுத்த இடியையும் இறக்கிவிட்டது மத்திய அரசு. இதுநாள் வரையிலும் ஸ்டீபன்பாபுஏற்றுமதியாளர்களுக்கு வழங்கி வந்த 9 விழுக்காடு ஊக்கத்தொகையை கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து 2 விழுக்காடாகக் குறைத்து, எங்கள் வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறது மத்திய அரசு. இந்த ஊக்கத்தொகைக் குறைப்பு தொழில் முனைவோர்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் வெளிநாடுகளுக்கு ஜவுளிப் பொருள்களை ஏற்றுமதி செய்யும்போது அங்குள்ளவர்கள் திடீரென சரக்கு சரியில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டால், அப்போது அரசு தந்த 9 விழுக்காடு ஊக்கத்தொகையைக் கொண்டு இழப்பைச் சமாளித்து வந்தோம். இனி அதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. 

ஏற்கெனவே, கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாயப்பூங்கா இல்லாமல், துணிகளைச் சாயமேற்றவும், சலவை செய்வதற்கும் திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று அதிகம் செலவழித்து துணிகளைச் சாயமேற்றி வருகிறோம். ஜி.எஸ்.டி வரியால் 10 விழுக்காடு ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் முடங்கிவிட்டது. இதனால், பல ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் ஊக்கத்தொகைக் குறைப்பு ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்குக் கவலையளிப்பதாக அமைந்துள்ளது. இதன்மூலம், நாங்கள் வெளிநாட்டு ஆர்டர்களை முடிக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, நசிந்துகொண்டிருக்கும் ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசு, ஜி.எஸ்.டியை ஒரே சீராக 5 விழுக்காடு என்ற அளவுக்குக் குறைக்க வேண்டும். ஊக்கத்தொகையை பழையபடி 9 விழுக்காடாகவே உயர்த்தி வழங்க வேண்டும். இல்லையென்றால், 10 விழுக்காடு முடங்கியுள்ள ஜவுளித் தொழில் 30 விழுக்காடாக உயரும் அபாயம் ஏற்படும்" என்று எச்சரிக்கை செய்து முடித்தார்.

என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!