வாழைகளைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்: வருத்தத்தில் விவசாயிகள்!

நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பயிரிட்டுள்ள விவசாயிகளின் வாழைகளைக் காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். 

காட்டுப்பன்றிகள் தொல்லை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி, மஞ்சன்குளம், கடம்போடு வாழ்வு, ராஜாக்கமங்கலம், சிறுமளஞ்சி, கலுங்கடி உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிகமாகப் பயிரிடப்படுகிறது. தற்போது பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாயிகள், வாழையைக் காப்பாற்ற வெளியிடங்களிலிருந்து டிராக்டர் மூலமாக தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து பாய்ச்சி வருகிறார்கள். ஒரு சிலர், இருக்கும் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தி வாழையைப் பாதுகாத்து வருகிறார்கள். 

இந்த நிலையில் நம்பியாற்று படுகையில் பயிரிடப்பட்டிருக்கும் வாழையைக் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து அழிப்பதாக புகார் எழுந்துள்ளது. சூரங்குடி பகுதியில் கொம்பையா என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில் புகுந்த காட்டுப்பன்றிகள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வாழையைச் சேதப்படுத்தி விட்டுச் சென்றன. இதேபோல இந்தப் பகுதியில் ஏராளமான விவசாயிகள் காட்டுப் பன்றியின் அட்டகாசத்தால் வாழையைப் பறிகொடுத்து விட்டு பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.

இது பற்றி விவசாயிகள் கூறுகையில், ‘காட்டுப்பன்றிகள் மலைப் பகுதியிலிருந்து கூட்டமாக வெளியே வந்து பயிர்களைச் சேதப்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. சமீப காலமாக காட்டுப்பன்றிகளால் வாழைகள் அதிகமாகச் சேதமடைகின்றன. அப்படிச் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். விளை நிலங்களைச் சுற்றிலும் நடமாடும் காட்டுப்பன்றிகளைக் காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!