நெல்லையில் 55 பேருக்கு டெங்கு; 3 வயதுச் சிறுமி உயிரிழந்ததால் பதற்றம்!

நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நோயின் காரணமாக 3 வயதுச் சிறுமி உயிரிழந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

டெங்கு பலி

நெல்லை மாவட்டத்தில் டெங்கு நோயின் பாதிப்பு கடந்த  6 மாத காலமாக தீவிரம் அடைந்து வருகிறது. டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் காரணமாக கடந்த 6 மாதத்தில் மட்டும் 15-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நோயின் பாதிப்பு காரணமாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் அதிகமானோர் குழந்தைகள்.

நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 90 குழந்தைகளும் 200 பெரியவர்களும் மர்மக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 38 பேருக்கு டெங்குக் காய்ச்சல் இருப்பது பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது. அதனால் டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் 75 குழந்தைகளும் 90 பெரியவர்களும் மர்மக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 17 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முத்துராஜ்அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 55 பேருக்கு டெங்குக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்களிடம் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. இந்த நிலையில், நேற்று முந்தினம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கோழிக்கடை உரிமையாளரான முத்துராஜ் என்பவர் மர்மக் காய்ச்சலுக்கு பலியானார். 

அத்துடன், பாளையங்கோட்டை திருமலைகொளுந்துபுரத்தைச் சேர்ந்த அடைக்கலம் என்பவரும் மர்மக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். அவருக்குக் கடந்த சில தினங்களாகக் காய்ச்சல் நீடித்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  இந்த நிலையில், சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற மூன்று வயதுச் சிறுமியும் மர்மக் காய்ச்சல் காரணமாக இன்று பலியானார், டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில்,

மர்மக் காய்ச்சலுக்கு அடுத்தடுத்து நடக்கும் மரணங்கள் நெல்லை மாவட்ட மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது. அதனால் மர்மக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!