வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (10/10/2017)

கடைசி தொடர்பு:08:40 (10/10/2017)

பறிபோன நிலம்... கண்டுகொள்ளாத போலீஸ்... தீக்குளிக்க முயன்ற விவசாயி!

தனது நிலத்தை மிரட்டி கையெழுத்து வாங்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மற்றும் அதிகாரிகளைக் கண்டித்து அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                         

அரியலூர் மாவட்டம், சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பரமசிவம். இவருக்குச் சூரியமணல் கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. இவரது நிலத்துக்கு அருகில் சிவக்குமார் என்பவர் நிலம் வாங்கியுள்ளார். அப்போது பரமசிவத்துக்குச் சொந்தமான நிலத்தையும் கொடுக்கும்படி பலமுறை வற்புறுத்தியிருக்கிறார் சிவக்குமார். அதற்கு பரமசிவம் மறுக்க, தனக்குக் கிடைக்காத இடம் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று சொல்லி ஆட்களை வைத்து பரமசிவத்தைக் கடுமையாக அடித்திருக்கிறார்.

                          

ரத்தக் காயங்களுடன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் பரமசிவம். ஆனால் காவலர்கள் சிவக்குமாரிடம் பணத்தை வாங்கிகொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக்கூறப்படுகிறது. காவல்நிலையத்தில் புகார் கொடுத்த காரணத்துக்காக பரமசிவத்தைக் கடத்திச் சென்ற சிவக்குமாரின் ஆதரவாளர்கள் பரமசிவத்தின் நிலத்தை மிரட்டி எழுதி வாங்கி இருக்கிறார்கள். பரமசிவம் தனது நிலத்தை மீட்டுத் தரும்படியும் தன்னைக் கடத்திச் சென்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகார் செய்துள்ளார்.

                 

ஆனால், யாரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த பரமசிவம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது, ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரைக் காப்பாற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.