Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரட்டை இலை மெதுவாக வரட்டும்..! கட்சி  நிர்வாகிகள் எங்கே?

'இரட்டை இலை மெதுவாக வரட்டும்... முதலில், கட்சிப் பதவிகளுக்கு நிர்வாகிகளைப் போடுங்கள்' என்ற குரல், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். பார்வைக்குக் கோப்புகளாகப் போய்க்கொண்டிருக்கிறது. கோட்டைக்கே நேரில் போய் மனுக்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர் பதவியில் இல்லாத ர.ர-க்கள்.தேர்தல் பிரசாரத்தின்போது, 'கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே தெரியவில்லை'என்றார், ஜெயலலிதா. இன்றைய சூழலில், 'அம்மா, காப்பாற்றிக் கொடுத்த  இரட்டை இலையும்,  கட்சியும்தாம் கண்ணுக்குத் தெரியவில்லை'  என்கிறார்கள் ர.ர-க்களே. காலையில் சொன்னதை மாலையில் மறுக்கும் மந்திரிகள், புதிய பேட்டியில் இன்னொரு உலையை வைத்து  விட்டு, அதற்கொரு மறுப்பை அடுத்த நாள் பேட்டியில் சொல்லும் நிலைதான் இருக்கிறது.

'இரட்டை இலை எப்போது ?' ஈ.பி.எஸ்.,  ஓ.பி.எஸ்.,

சசிகலா- டி.டி.வி. தினகரன் அணியில் இருந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள்,  இப்போது முதலமைச்சர் எடப்பாடி அணியில் உள்ளனர். துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வமும் அதே எடப்பாடி அணியில்தான் இருக்கிறார். எடப்பாடி அணி- ஓ.பி.எஸ். அணி என்று அணிகள் பிரிந்திருந்தபோது, சசிகலா- தினகரன் அணியை எதிர்க்க பலம் இல்லாமல் இருந்தது. எடப்பாடி அணி- ஓ.பி.எஸ். அணி இணைப்புக்குப் பின், டி.டி.வி. தினகரனின் ஒவ்வொரு முன்னெடுப்பும் சறுக்கலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வமும் தினமும் கோட்டைக்கு வருகிறார்கள். அவரவர் இருக்கையில் அமர்ந்து அதிகாரத்தைப் பகிர்ந்து கட்சி- ஆட்சியைக் கவனித்துக்கொள்கிறார்கள். எல்லாம் சரி, கோட்டைக்குள் கட்சி எங்கே இருக்கிறது? இருக்கிறது, முதலமைச்சர், துணை முதலமைச்சரைப் பார்க்க வரும் கட்சி நிர்வாகிகள் அனைவர் கைகளிலும் அந்தக் கோட்டைக்குள் கட்சி இருப்பதைச் சொல்லும் அந்தக் 'கோப்பு' காணப்படுகிறது.


அந்தக் கோப்புகளில் இப்படி இருக்கிறது... "மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.  கட்சிப் பதவிகளில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆதரவுபெற்றவர்களே  இன்னமும் மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள். வட்டம், ஒன்றியம், பகுதி, தொகுதி, மாவட்டம் மற்றும் பிற அணிச் செயலாளர்கள் பொறுப்புகளிலும் அவர்களே இருக்கிறார்கள். கட்சிப் பொறுப்பில் இருக்கும் நம்முடைய அணி நிர்வாகிகளை, நம்மால் நீக்கிவைக்கப்பட்ட  தினகரன் நீக்குகிறார். ஆட்சி நம்மிடம் இருக்கிறது என்பது தெரியும். கட்சி யாரிடம், இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

தேர்தலும், சின்னமும் வரும்போது  மெதுவாகவே வரட்டும். கட்சிப் பொறுப்புகளை முன்கூட்டியே எங்களுக்கு வழங்கினால்தான் இப்போதிருந்தே தொண்டர்களைச் சந்தித்து கட்சியை வளர்க்கலாம். ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். ஐயாக்கள் ஒற்றுமையாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம். அதேபோல நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். வாக்காளர் சேர்ப்பு முகாமிலிருந்து, டெங்கு விழிப்புஉணர்வு முகாம் வரை எங்களுக்குத் தனித்தனி சாமியானா பந்தல்தான், தனித்தனி டீக்கடை, தனித்தனி நாற்காலிதான். அணிகளாக நீங்கள் இணைந்தாலும்  உட்கட்சியில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. எங்களுக்குப் பொறுப்புகளை உடனே கொடுங்கள். இன்னமும் கட்சிப் பொறுப்பில் இருக்கிற சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆதரவு ஆட்களை உடனே நீக்குங்கள்" இப்படிப் போகிறது அந்தக் கடிதம். சென்னையில் மூன்று மாவட்டச் செயலாளர்களும், 10 பகுதிச் செயலாளர்களும் டி.டி.வி. ஆதரவு நிலையில் உள்ளவர்கள் என்றும் அந்தக் கடிதங்களில் சொல்லப்பட்டுள்ளதாம். சென்னை மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பஞ்சாயத்து தீபாவளி பட்டாசைவிட சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement