பாதாளச் சாக்கடை அமைப்பு இல்லாத அரசு மருத்துவமனை! - தஞ்சை அவலம்

நோய் வந்தால் மருத்துவமனைக்குச் செல்வோம். தஞ்சாவூர் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றால், ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட நோயாளிகளாகத்தான் திரும்பி வர வேண்டும் என்று புலம்புகிறார்கள் அப்பகுதி மக்கள். அந்த அளவுக்கு  அங்கு சுகாதாரச் சீர்கேடு தாண்டவமாடுகிறது. மகப்பேறு அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வீசும் ரத்த துர்நாற்றம், மருத்துவமனை வளாகம் முழுவதும் பரவுவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

.   

உணவகம் அமைந்துள்ள பகுதியிலும் அது வியாபித்திருப்பதுதான் அருவருப்பின் உச்சம். நோயாளிகளுடன் உதவிக்கு வரக்கூடியவர்கள் முகச்சுளிப்புடன் உணவருந்துகிறார்கள். 

ஏன் இந்த அவலம்? இங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் பேச்சுக்கொடுத்தோம். ‘முன்னாடியெல்லாம் இப்படி வெளியில வாடை அடிக்காது. காரணம், ஏற்கெனவே இருந்த பழைய கட்டடத்துல பாதாளச் சாக்கடை அமைப்பு இருந்துச்சு. ஆனா, இப்ப அந்த அமைப்பு இல்லை. திறந்த நிலையிலதான் ரத்தம் உள்ளிட்ட கழிவுநீர் வெளியேற்றப்படுது. அதனாலதான் இப்ப இவ்வளவு மோசமான சீர்கேடு. நோயாளிகளுக்குப் பயன்படுத்தின பஞ்சு, பேண்டேஜையெல்லாம் முறையா  அப்புறப்படுத்தாம வெளியிலேயே அங்கங்க சிதறிக்கிடக்கு. தேவையான அளவுக்கு குப்பைத்தொட்டிகள் இல்லை. முன்னாடி இருந்த மகப்பேறு பிரிவு கட்டடத்துல, கர்ப்பிணிப் பெண்களின் அலறல் சத்தம் வெளியில கேட்காது. கட்டடத்தின் அமைப்பு அந்த மாதிரி அமைக்கப்பட்டிருந்துச்சு. ஆனா, இப்ப உள்ள கட்டடம் ரொம்ப மோசம். நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குறதுக்கான இடமும் போதுமானதா இல்லை. ரொம்பச் சின்ன இடம். வெயில், மழை நேரத்துல ரொம்பவே அவதிப்படுறாங்க. இதுல பிச்சைக்காரர்கள், கஞ்சா பேர்வழிகள், திருடர்கள் தொந்தரவும் நாளுக்குநாள் அதிகமாகிக்கிட்டே போகுது. இதையெல்லாம் எங்க போய்ச் சொல்றதுனு தெரியாம எங்ககிட்டதான் புலம்புறாங்க. ஒருசிலர் இதை உயர் அலுவலர்கள் கவனத்துக்கும் கொண்டுபோய்க்கிட்டும் இருக்காங்க. ஆனாலும் இந்தப் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை.” என்றார்கள். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!