Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்டணக்கொள்ளையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள்... மாணவர்கள் அதிர்ச்சி, பெற்றோர்கள் புலம்பல்!

Chennai: 

மருத்துவக் கலந்தாய்வு முடிந்து எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆரம்பித்த நிலையில், அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்கப்படுவதாகப் பெற்றோர்களும் மாணவர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர். 

மருத்துவக்கல்லூரிகள்

அரசு ஒதுக்கீட்டில் அரசுக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் 13,600 ரூபாய் மட்டுமே. அரசு ஒதுக்கீட்டில் சுயநிதிக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு 3,85,000 முதல் 4,00,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தற்போது தனியார் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களிடம் 2.25 லட்சம் ரூபாய் கூடுதல் கட்டணம் கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து தனியார் சுயநிதிக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மருத்துவ மாணவியும் அவரது தந்தையும் நம்மிடம் பேசினார்கள்.

“தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றிருந்தாலும், அவர்களுக்கு இடம் கிடைக்காமல் இதர மாநில மாணவர்களே குறிப்பிடத்தக்க அளவில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். இதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம்பிடித்திருக்கிறார்கள். சரி, கிடைத்த இடத்தில் சேரலாம் என சுயநிதிக் கல்லூரியில் சேர்ந்தால், கல்லூரி ஆரம்பித்து ஒரு மாதத்திலேயே `இவ்வளவு ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும்' எனத் தனியே பாண்ட் பேப்பரில் எழுதி வாங்கிக்கொள்கிறார்கள். இதன் மூலம் அரசு நிர்ணயித்த தொகையைவிட ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அதிக அளவில் செலுத்தவேண்டியிருக்கிறது. இதைத் தவிர, அரசு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே கட்டணம் பெறும் நிலையில் ஐந்து முறை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கையெழுத்து வாங்கிக்கொள்கிறார்கள்" என்று கண்ணீருடன் சொன்னார் மருத்துவக் கல்லூரி மாணவி.

மருத்துவக்கல்லூரிகள்

மாணவியின் தந்தை “இதுபோல் தமிழ்நாட்டிலுள்ள இரண்டு சுயநிதிக் கல்லூரியைத் தவிர மற்ற அனைத்து சுயநிதிக் கல்லூரிகளிலுமே எழுதி வாங்கிக்கொள்கிறார்கள். நாங்களே நேரடியாக ஊடகத்தில் பேசினால், என் மகளின் மதிப்பெண்ணில் கை வைத்துவிடுவார்கள். பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கிறோம். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சேர்ந்தாலும், இதுபோன்று பணம் செலுத்தவேண்டிய அவலம் நீடிக்கத்தான் செய்கிறது. இந்தப் பணத்துக்கு எந்தவிதமான விளக்கத்தையும் சொல்வதில்லை. தகவல் கேட்டால், `வேறு கல்லூரியில் சேர்ந்துகொள்ளுங்கள்' எனச் சொல்கிறார்கள். இதில் பஸ் கட்டணம், விடுதிக் கட்டணம் என்பது எல்லாம் தனி.  6,35,000 ரூபாய் ஐந்து முறை கட்டுகிறேன் எனக் கையெழுத்திட வேண்டும். இதே வங்கியில் கடன் வாங்க 7,10,000 ரூபாய் வரை அனுமதி வழங்குகிறார்கள். மருத்துவ கவுன்சில்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய கட்டணம் வசூலிக்கிறார்களா எனக் கட்டண நிர்ணயக் குழு கல்லூரிகளில் மாணவர்களிடம் பேசி, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். 

“ஆரம்பத்தில் ‘தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படும்' எனச் சொன்னார்கள். ஆனால், தற்போது தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி என அனைத்து மாநில மாணவர்களும் சேர்ந்திருக்கிறார்கள். இதில் ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இவர்கள் ஏதேனும் ஓர் இடத்தில் மட்டும் விண்ணப்பித்திருந்தால் பரவாயில்லை. ஆனால், இவர்கள் இரண்டு இடங்களிலும் விண்ணப்பித்து இங்கு கட்டணம் குறைவு என்பதால் சேர்ந்திருக்கிறார்கள். இவர்கள், மாநிலத் தர வரிசைப் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறார்கள். தமிழக சுகாதாரத் துறை, இவர்கள் சேர்வதற்கு ஏதுவாக அரசாணை தயாரித்திருக்கிறார்கள் என்பது உச்சகட்ட அவலம். இதுகுறித்த வழக்கும், உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் இருக்கிறது. 

மருத்துவக்கல்லூரிஅரசியல்வாதிகள் ஒரு நாளில் பேசிவிட்டு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். நீதிமன்றத்திலும் புரிதல் இல்லை. அதிகாரிகள் குளறுபடிகள் மூலமே சேர்க்கை நடத்திவருகிறார்கள். நம்முடைய மாணவர்கள் ஏராளமானவர்களுக்கு இடம் கிடைத்திருக்கவேண்டிய சூழலில் ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே இடம் கிடைத்திருப்பது நல்லதல்ல. தமிழ்நாடு கலந்தாய்வில் கேரள மாணவர்களைச் சேர்க்க, கேரள முதலமைச்சரே பேசி மாணவர்களைச் சேர்த்துவிடுகிறார். ஆனால், தமிழ் மாணவர்கள் சேர்ப்பதற்கு இங்குள்ள அரசு உடனே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" என்றார்.

தனியார் கல்லூரிகளின் கட்டண விவரங்கள் குறித்து மருத்துவக் கல்லூரி சேர்க்கை குழுவின் செயலாளர் செல்வராஜிடம் இதுகுறித்து கேட்டோம்.  “அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டப்படி தவறு. இதுகுறித்து உரிய ஆதாரத்துடன் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்கக்கத்தில் புகார் தெரிவித்தால், கல்லூரிமீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

உண்மையிலேயே நடவடிக்கை எடுப்பார்களா அல்லது ‘நடவடிக்கை எடுப்போம்’ எனச் சொல்வதோடு சரியா என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement