Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கோரி வழக்கு! மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல வழக்குத் தாக்கல்செய்துள்ளார். அதில், "இந்தியாவில், ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்கள், இந்தியப் பொது சுகாதாரத்துக்கு சவாலாக அமைந்துள்ளது. இந்த மர்மக் காய்ச்சலுக்கு, ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு, சிக்குன்குனியாவின் பாதிப்பு, 1950-ம் ஆண்டு முதல் இருந்து வந்தாலும், தீவிரப் பாதிப்பென்பது கடந்த 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 5 லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையில், 2.5 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் இந்தக் காய்ச்சல்களின் பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்குவைக் குணப்படுத்த உரிய மருந்து இல்லாத நிலையில், தொடர் கண்காணிப்பு, ஓய்வு, திரவ உணவுகள் மூலமே இதைச் சரிசெய்ய இயலும். இதற்கான தடுப்பூசி ஏதும் இல்லை. வாழிடங்கள், பயணிக்கும் இடங்களில் கொசுக்கள் கடிப்பதைத் தடுப்பதன் மூலமே இதைத்  தடுக்க இயலும். டெங்கு பாதிப்பின் அறிகுறியைக் கண்டறியவே, 3 முதல் 14 நாள்கள் ஆகின்றன.

தமிழகத்தில் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மர்மக்காய்ச்சல் பரவிவருவது குறித்த செய்திகள், தினந்தோறும் ஊடகங்கள் வாயிலாக வெளிவருகின்றன. கடந்த ஆண்டு, இந்தக் காய்ச்சல்களுக்கு 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர். பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில், கொசுவால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, கழிவுநீர் வாய்க்கால்களைச் சுத்தப்படுத்தவும் குப்பைகள் தேங்காமல் பாதுகாக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அரசும் அதிகாரிகளும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பல்வேறு கிராமங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதற்கான பலிகளும் அதிகரித்துவருகின்றன. ஆனால், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிப்பு அதிகரித்து, மூக்கு வழியாக ரத்தம் கசியும் நிலையிலும் உரிய சிகிச்சை அளிக்க அரசு தவறியுள்ளது.

மதுரை, திருமங்கலம் தாலுகாவில் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரையூரில் 4 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். பரமக்குடி தாலுகாவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 200 பேர் டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், டெங்குவுக்கு 30 பேர் பலியாகியுள்ளனர். வாணியம்பாடியில் 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மருத்துவர்கள் சென்று சிகிச்சையளிக்கவே அஞ்சும்நிலை உள்ளது. இப்படிப் பல கிராமங்கள், டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளத் தவறிவிட்டது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தனி வார்டுகள் இல்லாமல், சாதாரண வார்டுகளில் சிகிச்சை அளிப்பது போதுமானதாக இல்லை. இந்த நிலையில், மதுரையில் இயங்கிவந்த மத்திய அரசின் பூச்சியியல் மருத்துவ ஆய்வு நிறுவனம், கொசுக்கள்குறித்தும் ஆய்வுசெய்துவந்தது. தற்போது டெங்கு உள்ளிட்ட கொசுவால் பரவும் நோய்கள் அதிகரித்துவரும் நிலையில், பாண்டிச்சேரியிலுள்ள நிறுவனத்துடன் இந்த ஆய்வு  மையத்தையும் இணைக்கத் திட்டமிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஆகவே, இந்தப் பகுதியில் கொசுக்கள்குறித்த ஆய்வு தடைபடும். இது, ஏற்கெனவே டெங்கு உள்ளிட்ட நோய்களால் ஏற்படும் பாதிப்பை அதிகப்படுத்தும்.

ஆகவே, இந்த மையத்தை பாண்டிச்சேரி மையத்துடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, தமிழகத்தில் கொசுவைக் கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடுசெய்ய வேண்டும். தமிழகத்தில் தினமும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்து வருகின்றனர். 25 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழக அரசு இந்த உண்மையை மறைத்துவருகிறது. மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்காமல், வெறும் பார்வையாளனாக இருந்துவருகிறது. டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை. ஆகவே, டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை கோரி மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, மதுரையில் இருக்கும் ஐ.சி.எம்.ஆர் கொசு உள்ளிட்ட பூச்சிகள் ஆராய்ச்சி மையத்தை பாண்டிச்சேரி நிறுவனத்துடன் இணைக்கும் திட்டத்துக்குத் தடை விதிக்கவும், டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக வரும் 24-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement