நாளை அமைச்சரவைக் கூட்டம்! முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. டெங்கு காய்ச்சல் பிரச்னை, அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு, பழைய பென்ஷன் திட்டம் போன்றவைகள்குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 'பழைய பென்ஷன்  திட்டத்தையும் 7-வது ஊதிய உயர்வையும் அமல்படுத்த வேண்டும்' என்று கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். இந்தப் பிரச்னை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜரானார். ''செப்டம்பர் 30-ம் தேதி நிபுணர் குழு தரும் அறிக்கை அடிப்படையில், அரசின் நிதி நிலையைக் கணக்கில்கொண்டு நான்கைந்து மாதத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்' என்றார். ஆனால் நீதிமன்றம், 'அக்டோபர் 13-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்'  என உத்தரவிட்டது. 

அரசு ஊழியர்கள் போராட்டம்

இந்நிலையில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க அமைக்கப்பட்ட 'நிபுணர் குழு'  செப்டம்பர்  27-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அறிக்கை வழங்கியது. இந்தப் பிரச்னைகுறித்து முடிவுசெய்வதற்காக, அக்டோபர் 11-ம் தேதி 11.15 மணிக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்கிறார்கள். அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத் திட்டங்கள்குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும் டெங்கு குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா, மாநிலம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்னைகள் குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!