Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொலை வழக்கில் தேடப்பட்ட சுபாஷ் பண்ணையார் நீதிமன்றத்தில் சரண்!

காவல்துறையின் வாகனத்தில் இருந்த கைதியைக் கொலைசெய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுபாஷ் பண்ணையார், இன்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சுபாஷ் பண்ணையார்

தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான அசுபதி பண்ணையார், சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக, கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வெட்டிக் கொல்லப்பட்டனர். அதன்பின்னர், அசுபதி பண்ணையாரின் மகன் வெங்கடேச பண்ணையார், சிவசுப்பிரமணியன் மகன் சுபாஷ் பண்ணையார் ஆகியோர் கோஷ்டிகளைச் சேர்த்துக்கொண்டு பழிக்குப் பழியாகக் கொலைகள் செய்துவந்தனர். பசுபதி பாண்டியனுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டுவந்தனர். இதன் தொடர்ச்சியாக நடந்த பழிவாங்கும் படலத்தில் பல தலைகள் உருண்டன. ஒரு கட்டத்தில், பசுபதி பாண்டியனுக்கு வைத்த குறியில், அவரது மனைவி ஜெசிந்தா சிக்கினார். அவர் கொல்லப்பட்டதும், பசுபதி பாண்டியன் தனது இருப்பிடத்தை திண்டுக்கல்லுக்கு மாற்றினார். ஆனாலும், பசுபதி பாண்டியனின் ஆதரவாளர்களான பாம் கர்ணன், பீர் முகம்மது ஆகியோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்க, பசுபதி பாண்டியன் தரப்பு நேரம் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால், திண்டுக்கல்லில் வைத்து பசுபதி பாண்டியனை 2011 ஜனவரி 10-ம் தேதி எதிர்த்தரப்பு வெட்டிக் கொலைசெய்தது.

பசுபதி பாண்டியனின் மரணத்துடன், இந்தப் பழிக்குப் பழி வாங்கும் சம்பவங்கள் முடிவுக்கு வந்துவிடும் என காவல்துறையினர் நினைத்தனர். ஆனால், வன்முறையும் கோபமும் தொடர்ந்தது. கடந்த 2016 மார்ச் 8-ம் தேதி, சுபாஷ் பண்ணையாரை கொலைசெய்ய வந்த கும்பலிடமிருந்து அவர் தப்பினார். ஆனால், அப்போது சிக்கிக்கொண்ட டிரைவர் ஆறுமுகசாமி தலையை துண்டித்து எடுத்துச் சென்று, தெய்வச்செயல்புரம் பகுதியில், கொடிமரத்தில் இருந்த பசுபதி பாண்டியன் படம் முன்பு வைத்துவிட்டுச் சென்றனர். அய்யாக்குட்டி என்பவரும் அப்போது கொல்லப்பட்டார். இப்படியாகக் கொலைகள் தொடர்ந்தன.     

இந்த நிலையில், அசுபதி கொலை வழக்கில் எஞ்சிய நபராக சிங்காரம் என்பவர் மட்டுமே இருந்தார். அவரை 2017 பிப்ரவரி 24-ம் தேதி  நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய காவல்துறை வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றபோது வழிமறித்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக 13 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கில் சுபாஷ் பண்ணையாருக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதனால், சுபாஷ் பண்ணையாரையும் சிங்காரம் கொலை வழக்கில் சேர்த்தனர். அவரிடம் விசாரணை செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், போலீஸாரின் பிடியில் சிக்காமல், சுபாஷ் பண்ணையார் தலைமறைவாகவே இருந்துவந்தார். அதனால், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான நெல்லை உதவி கமிஷனர் விஜயகுமார், விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல், தலைமறைவாக இருந்த சுபாஷ் பண்ணையாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன், அவரது சொத்துகளை முடக்கவும் போலீஸார் தீவிரம் காட்டினார்கள். இந்த நிலையில், சுபாஷ் பண்ணையார் நெல்லை மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சந்திரா முன்னிலையில் இன்று ஆஜரானார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement