வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (10/10/2017)

கடைசி தொடர்பு:14:30 (10/10/2017)

டெங்கு விவகாரம் - தனியார் மருத்துவமனைகளுக்குக் கடிவாளம் போட அரசு திட்டம்!

டெங்கு விவகாரத்தில், தனியார் மருத்துவமனைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பதுகுறித்து ஆலோசித்துவருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், டெங்கு பாதிப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்துவருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துவருகின்றன. டெங்கு பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்க, உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் பரவலாக  கோரிக்கை எழுந்துவருகிறது. தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்துவருகிறது. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற புகார் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டுவருகிறது.   

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், ‘டெங்கு விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்குக் கட்டுப்பாடு விதிப்பதுகுறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்திய மருத்துவச் சங்க நிர்வாகிகளுடன் மதியம் 2 மணிக்கு ஆலோசனை நடத்தவிருக்கிறோம். ஆலோசனைக்குப் பின்னர், டெங்கு விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு விதிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக, மாலை 5 மணிக்கு அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றார்.