Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’தகுதி என்பதே பிரித்தாளும் சூழ்ச்சிதான்’ - நீட் தேர்வுக்கு எதிராகக் கொதித்த திருமுருகன் காந்தி

ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலையை மத்திய அரசு கண்டிக்க வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்துசெய்ய கோரிக்கை வைத்தும் நேற்று தமிழ்நாடு  முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டம் நடத்தினார்கள். இதில், த.மு.மு.க. மாநிலப் பொதுச்செயலாளர் அப்துல் சமீதும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் கலந்துகொண்டார்கள்.

சேலம் கோட்டை மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய திருமுருகன் காந்தி, ‘ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலையை சர்வதேச கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். 1930-ம் ஆண்டில், இந்தியாவின் காலனி ஆதிக்கத்தில் பர்மா இருந்தபோது, தமிழ் பேசக்கூடிய முஸ்லிம்கள்மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. பர்மாவில் பூர்வீக முஸ்லிம்களும் இருந்தார்கள். வங்கதேசத்தில் இருந்தும் ஆங்கிலேயர்களால் புலம்பெயர்ந்து சென்ற முஸ்லிம்களும் அங்கு இருந்தார்கள்.

அவர்கள், ரங்கூன் மாநகரில் ரப்பர் தோட்டங்களை உருவாக்கி, ரப்பர் எடுத்தார்கள். இந்த ரப்பர்கள், அமெரிக்காவில் கார் டயர்கள் தயாரிக்க உதவியது. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, பர்மாவில் ரங்கூன் மாநகரில் குடியிருந்த ஏழைத் தமிழ் முஸ்லிம்களுக்கு வேலையில்லாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, புத்த பிட்சுகள் தலைமையில் தமிழ் முஸ்லிம்களை வந்தேரிகளாகக் கருதி, அடித்துத் துன்புறுத்தி படுகொலைசெய்தார்கள். அப்படி சித்ரவதைக்கு உள்ளாகும் தமிழ் முஸ்லிம்களைக் காலா என்று புத்த பிட்சுகள் அழைத்தார்கள். தற்போது, அதன் தொடர்ச்சியாகத்தான் ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுவருகிறார்கள். அதை ஆதரிக்கும் நோக்கத்தில் மத்திய மதவாத பா.ஜ.க., அரசின் தலைவர் மோடி செயல்பட்டுவருகிறார். இதை நாம்  தடுக்கத் தவறினால், நாளை நமக்கும் அதே நிலைதான் ஏற்படும்.

அதே போல, நீட் தேர்வு என்பது மறைமுகத் தீண்டாமை. 100 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதம் பேச, எழுதத் தெரிந்தால் மட்டுமே சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற தகுதி வைத்திருந்தார்கள். தகுதி என்பதே பிரித்தாளும் சூழ்ச்சிதான். தகுதித் தேர்வுக்குப் பதிலாக, கடலில் நீந்தத் தெரிந்தால் மட்டுமே மரைன் இன்ஜினீயரிங் படிக்க முடியும், கார் ஓட்டத் தெரிந்தவன் மட்டுமே மோட்டார் மெக்கானிக்கல் ஆக முடியும் என்று ஸ்கில் டெஸ்ட் வையுங்கள். அனைத்துத் துறையிலும் எங்க ஆட்கள் போவார்கள். மணி ஆட்டுவதற்கு மட்டுமே ஒரு குறிப்பிட்ட சமூகம் செல்லும்.

அதனால், நீட் தேர்வைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். 100 ஆண்டுகளாக நம் தமிழ்நாடு சமூகநீதி கோட்பாட்டால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அது சிதைந்துபோக விடமாட்டோம். உயிரைக் கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம். மத்திய பா.ஜ.க.,அரசு தேச பாதுகாப்பைத் தனியாருக்குத் தாரை வார்த்திருக்கிறது. ஒரு ராக்கெட்கூட தயாரிக்காத அனில் அம்பானிக்கு, இந்திய ராணுவ விமானங்கள் தயாரிக்கும் டெண்டரை மோடி கொடுத்ததோடு, ரூ.30 கோடி மானியமும் கொடுத்திருக்கிறார். பொய் பேசுவது மட்டுமே தகுதியாகக் கொண்டிருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு, ராணுவ அமைச்சராகப் பதவி கொடுத்தது மிகப் பெரிய அவமானம்' என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement