கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு | SC orders trial proceedings against Yuvraj accused in the murder of Gokulraj to complete n 18 months

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (10/10/2017)

கடைசி தொடர்பு:14:42 (10/10/2017)

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யுவராஜுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 

யுவராஜ்

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக, திருச்செங்கோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்து வந்த பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கும், கோகுல்ராஜ் கொலை வழக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ், கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபரில் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரணடைந்தார். அதன்பின் அவர், உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அவரது ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவே, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

இந்த நிலையில், யுவராஜுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், யுவராஜுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை 18 மாதங்களுக்குள் முடிக்கவும், அதுவரை யுவராஜுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் கீழமை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 


[X] Close

[X] Close