Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா கொண்டு வரப்படும் ஸ்ரீதர் உடல்!

   ஶ்ரீதர் தனபால்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல தாதா ஸ்ரீதர் தனபால். இவர்மீது சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு  வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளில் ஸ்ரீதர் தனபால்  ஆஜராகாததால் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தால் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஸ்ரீதர் தனபாலைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில் ஸ்ரீதர் தனபால், துபாய், இலங்கை போன்ற நாடுகளில் பதுங்கியிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டுவந்தது.
அதேவேளையில், ஸ்ரீதர் தனபால் பயன்படுத்திய பாஸ்போர்ட்டுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் அதைப் புதுப்பிக்க எப்படியும் இந்தியா திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான் கம்போடியாவில் ஸ்ரீதர் தனபால் தற்கொலை செய்துகொண்டதாக அவரின் குடும்பத்தினருக்கு அக்டோபர் 4-ம் தேதி தகவல் கிடைத்தது.

கம்போடியாவில் உள்ள கீமா மருத்துவமனைக்கு ஸ்ரீதர் தனபாலின் மகள் தனலட்சுமி வழக்கறிஞர்களுடன் சென்று இறந்தது ஸ்ரீதர்தான் என்பதை உறுதி செய்தபின்  இந்தியா திரும்பியுள்ளார். ஸ்ரீதர் தனபால் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி  ஆகியோரிடம் தனலட்சுமி மனு கொடுத்துள்ளார்.

தனலட்சுமி கொடுத்த மனுமீது உரிய பதில் கிடைக்காத நிலையில், அவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில், "என்னுடைய தந்தை ஸ்ரீதர் தனபாலின் உடலை மீட்கும் விவகாரத்தின் தீவிரத்தன்மையை உணராமல் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவதால், இந்த மனுமீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட வேண்டும்" என்று சொல்லப்பட்டிருந்தது.


மனு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், "ஸ்ரீதர் தனபால் பாஸ்போர்ட் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகளால் முடக்கப்பட்டுவிட்டது. தன்னை இலங்கை குடிமகன் என்று காட்டி அங்குள்ள பாஸ்போர்ட் மூலம் கம்போடியா சென்றுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கம்போடிய அரசு, இலங்கைக்குதான் அவரது உடலை அனுப்ப எக்சிட் (exit) அனுமதி வழங்கும். எனவே அவரது உடலை இந்தியா கொண்டு வருவதில் சட்டச் சிக்கல் உள்ளது. இருந்தாலும் ஸ்ரீதர் தனபால்  உடலை இந்தியா கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்றார்.

இதையடுத்து நீதிபதி, "ஸ்ரீதர்தனபால், இலங்கை பாஸ்போர்ட்டில் கம்போடியா சென்றாலும், அவருக்கு ஏற்கெனவே இந்திய அரசும் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது, அவர் இந்திய குடிமகன் என்பதற்கான ஆதாரங்களை மனுதரார் தாக்கல் செய்துள்ளார். எனவே அதனடிப்படையில் ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டு வர முடியாதா என்பதை மத்திய வெளியுறவுத்துறையிடம் கேட்டு இன்றே தெரிவிக்க வேண்டும்" என்று  மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். ஶ்ரீதர் தனபால் உடலை  இந்தியாவுக்கு கொண்டுவருவதில் உள்ள சிக்கல் இன்று மாலைக்குள் களையப்படும் என்று தெரிகிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement