''சுங்கச்சாவடிகள் வேண்டாம்!'' - 'லாரி ஸ்டிரைக்குக்குக் காரணம் சொல்லும் சண்முகப்பா | No need toll gate, Shanmugappa explains the reason for truck strike

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (10/10/2017)

கடைசி தொடர்பு:15:46 (10/10/2017)

''சுங்கச்சாவடிகள் வேண்டாம்!'' - 'லாரி ஸ்டிரைக்குக்குக் காரணம் சொல்லும் சண்முகப்பா

lorry strike

'லாரி ஸ்ட்ரைக்கினால், நாள்தோறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என்ற வரிகள்தான் நாடு முழுக்க தலைப்புச் செய்திகளாகப் படபடத்துக் கொண்டிருக்கின்றன. 

ஜி.எஸ்.டி வரி விதிப்பு, டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டணக் கொள்ளை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இரண்டாவது நாளாக லாரி ஸ்ட்ரைக் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நேரத்தில், லாரி உரிமையாளர்கள் நடத்திவரும் இந்தப் போராட்டம் பொருளாதார ரீதியாக பலத்தப் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரும் டோல் கமிட்டி சேர்மனுமான சண்முகப்பாவிடம் பேசினோம்....

''பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி லாரி ஸ்ட்ரைக் அறிவித்திருப்பது நியாயம்தானா?''

''இது தீபாவளி நேரம் என்பதால்தான் முதற்கட்டமாக 2 நாள்கள் மட்டுமே எங்களது போராட்டத்தை நடத்திவருகிறோம். அதற்குமுன்னதாக, எங்களது கோரிக்கைகளில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு பொதுமக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று முதலில் கேட்டுக்கொள்கிறோம். 

நாடு முழுவதும் அனைத்துப் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி வரி விதித்திருக்கிறார்கள். அதில் எரிபொருளான டீசலையும் ஏன் கொண்டுவரக்கூடாது என்றுதான் நாங்கள் கேட்கிறோம். அப்படிக் கொண்டுவந்தால், டீசலின் விலையில் 15 ரூபாய்வரை குறையும். இதன் தொடர்ச்சியாக, விலைவாசியும் கணிசமான அளவில் குறையும்; பொதுமக்களும் பயன்பெறுவார்கள். ஆனால், இன்னும் 6 மாதங்கள் கழித்து ஜி.எஸ்.டி-க்குள் டீசலைக் கொண்டுவருவோம் என்று ஒப்புக்குச் சொல்லிவருகிறது அரசு. 

ஜி.எஸ்.டி வருவதற்கு முன்பு வரையிலும் ஒரு புது டாக்ஸி 6 லட்சம் ரூபாயில் வாங்கிவிடலாம். இப்போது அதுவே 8 லட்சம் ரூபாய் என்றாகிவிட்டது. 10 வருடங்களுக்கு ஒருமுறைதான் புதிதாக வாகனங்களை வாங்குகிறோம். மேலும், நாட்டின் வருமானத்தைக் கருத்திற்கொண்டும்தான் இவ்விஷயத்தில் நாங்கள் ஜி.எஸ்.டி-யை எதிர்க்கவில்லை. ஆனால், டீசல் என்பது தினமும் பொதுமக்கள் பயன்படுத்திவரக்கூடிய எரிபொருள். இதையும் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவந்துவிட்டால், நாட்டுக்கான வருமானம் கிடைப்பதோடு, டீசலின் விலையும் குறைவதால் அதன் பயன் பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும். எங்களது வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். 
ஒவ்வொரு மாநிலத்திலும் டீசல் விலை வேறுபடுகிறது. தமிழகத்தில் டீசல் விலை 61 ரூபாய். கர்நாடகத்தில் 56 ரூபாய். மகாராஷ்டிராவில் 62 ரூபாய். இப்படியிருக்கும்போது நேஷனல் பெர்மிட்டில் லாரிகளை ஓட்டிக்கொண்டிருக்கும் அதன் உரிமையாளர்கள், டீசல் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.''

''டீசல் விலை தவிர்த்து வேறு என்னென்ன கோரிக்கைகளை முன்வைக்கிறீர்கள்?''

''தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளை எல்லாம் அடியோடு ஒழித்துக்கட்டிவிட்டு, அதற்குப் பதிலாக வருடத்துக்கு ஒருமுறை சுங்கச் சாவடிக் கட்டணங்களை அரசே வசூலித்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறோம். இப்படி நாங்கள் சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. 

lory strike

அதாவது, நேஷனல் பெர்மிட்டில் ஓடிக்கொண்டிருந்த லாரிகள் ஒருநாளில் அதிகபட்சமாக 250 கி.மீ வரை பயணித்துக்கொண்டிருந்தன. ஆனால்,  ஜி.எஸ்.டி அமுல்படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் 1427 கமர்ஷியல் டாக்ஸ் செக்போஸ்ட்டுகளை எடுத்துவிட்டார்கள். அதனால், இப்போது அதே லாரியானது ஒரு நாளில் 350 கி.மீ. வரை ஓடுகிறது. காரணம் நெடுஞ்சாலையின் இடையிடையே சுங்கச் சாவடிகளில் காத்துக்கிடக்கும் நேரம் குறைந்துவிட்டது. மேலும், சுங்கச்சாவடி வரிசையில் ஊர்ந்து ஊர்ந்து செல்வதால் விரயமாகும் எரிபொருளும் நேரமும் கணிசமான அளவில் சேமிக்கப்பட்டுள்ளது.

1427 செக்போஸ்ட்டுகளை எடுத்துவிட்டதாலேயே இத்தனை லாபங்கள் கிடைக்கிறது என்றால், இப்போதும் நடைமுறையில் இருக்கும் மற்ற சாவடிகளையும் எடுத்துவிட்டால், ஒரு லாரி தினமும் குறைந்தது 550 கி.மீ.-லிருந்து 600 கி.மீ.வரையிலும் ஓடும் வாய்ப்பு உள்ளது. டீசலும் கணிசமாக மிச்சமாகும்.''

''சுங்கச்சாவடிகள் மூலமாக வரி வசூல் செய்துவரும் தனியார் நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுமே?''

''அப்படியில்லை... அதற்கான விளக்கத்தையும் கூறிவிடுகிறேன். நாடு முழுவதும் நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் 36 தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு செய்திருக்கின்றன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, தொடர்ந்து 20 நாள்கள் லாரி ஸ்ட்ரைக் நடைபெற்றது. அப்போது இந்த 36 நிறுவனங்களும் 'சுங்கச்சாவடிக் கட்டணம் வசூல் செய்யமுடியவில்லை. நஷ்டஈடு வேண்டும்' என்று அரசுக்கு கோரிக்கை வைத்தன. உடனே மத்திய அரசும், சம்பந்தப்பட்ட 36 தனியார் நிறுவனங்களுக்கும் நஷ்ட ஈட்டுத்தொகையாக நாள் ஒன்றுக்கு 51 கோடி ரூபாயை பகிர்ந்தளித்தது. ஆர்.டி.ஐ மூலமாக நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அரசு கொடுத்துள்ள கணக்குகள்தான் இவை. ஆக, இந்தக் கணக்கின் அடிப்படையில் பார்க்கும்போது, நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஒரு நிறுவனம் செய்துள்ள முதலீட்டுத் தொகையை மிகச்சில வருடங்களிலேயே சுங்கச்சாவடிக் கட்டணமாக வசூல் செய்துவிடுகின்றன. ஆனாலும்கூட கால வரம்பின்றி டோல்கேட்கள் மூலமாக சுங்கக் கட்டணம் என்ற பெயரில், வாகனங்களிடம் தொடர் கொள்ளை அடித்துவருகிறார்கள். அரசுக்கு வரவேண்டிய பணத்தை இப்படித் தனியார் நிறுவனங்கள் வசூல் வேட்டை நடத்திக்கொள்வதை தடுக்கவும் அரசுக்கு வருவாயை ஏற்படுத்தித் தரவும்தான் நாங்கள் டோல்கேட் வரியை அரசுக்கே நேரடியாகக் கட்டிவிடுவதாகக் கூறுகிறோம்.

lory strike

நாடு முழுவதும் வணிக ரீதியாக மட்டும் 70 லட்சம் லாரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில், 40 லட்சம் லாரிகள் 24 மணி நேரமும் தேசிய நெடுஞ்சாலைகளிலேயே பிரயாணித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில், ஒரு லாரிக்கு ஒரு வருடத்துக்கான சுங்கச்சாவடிக் கட்டணமாக 50 ஆயிரம் ரூபாயை முன்னதாகவே அரசுக்குச் செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இதன்மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாகக் கிடைத்துவிடும். அப்படியிருக்கும்போது இந்த சுங்கச்சாவடிகளை எடுத்துவிடவேண்டியதுதானே? 
சென்னையிலிருந்து டெல்லி செல்வதாகயிருந்தால், மொத்தம் 47 சுங்கச் சாவடிகளைக் கடந்துபோயாக வேண்டும். இதனால் ஒட்டுமொத்தமாக ஒரு லாரிக்கு 9 மணி நேரம் விரயமாகிறது. அதிகப்படியாக எரிபொருள் விரயமாகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் இலக்கை சென்றடையமுடியவில்லை... இப்படி நிறைய சிரமங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசுக்கு வரவேண்டிய பணம் தனியார் நிறுவனங்களின் பாக்கெட்டுகளுக்குப் போய்விடுகிறது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு டோல்கேட் வரியை நேரடியாக அரசிடமே செலுத்திக் கொள்ளுமாறு கட்டமைப்பை மாற்றித் தரவேண்டும் என்பதும் எங்களது கோரிக்கைகளில் ஒன்று''
என்கிறார் சண்முகப்பா விளக்கமாக.


டிரெண்டிங் @ விகடன்