வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (10/10/2017)

கடைசி தொடர்பு:12:25 (11/10/2017)

'மூன்று நாள் அமைதிக்குப் பின் புயலான சசிகலா!' - குடும்ப உறவுகளுக்கு எச்சரிக்கை

சசிகலா

 மூன்று நாள்கள் அமைதிக்குப் பிறகு,  குடும்ப உறவுகளிடம் மனம்திறந்து பேசியுள்ளார் சசிகலா. அப்போது, சில காரணங்களைக் குறிப்பிட்ட  அவர், குடும்ப உறவுகளில் இரண்டு பேரை கடுமையாக எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, 5 நாள்கள் பரோலில் வந்தார். அவர், சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியுள்ளார். பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராசனைச் சந்திக்க மட்டும் சென்றார். மருத்துவமனையைத் தவிர வேறு எங்கும் அவர் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளார். சிறைத்துறையின் நிபந்தனைகளை முழுமையாக சசிகலா கடைபிடித்துவருவதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.

உளவுத்துறை போலீஸாரின் கழுகுப் பார்வையைத் தாண்டி சசிகலா எங்கும் செல்லவில்லை என்று கூறப்பட்டாலும், சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு அவர் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. எங்களை மீறி சசிகலா வெளியில் எங்கும் சென்றிருக்க முடியாது என்று சொல்கின்றனர் உளவுத்துறை போலீஸார்.

இந்த நிலையில், மூன்று நாள்கள் அமைதிக்குப் பிறகு சசிகலா, குடும்ப உறவுகளிடம் இன்று மனம்திறந்து பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'சசிகலாவைச் சந்திக்க ஆதரவாளர்கள் யாரும் வரவேண்டாம்' என்று தினகரன் சொல்லியுள்ளார். இதனால், தி.நகர் வீடு, பெரும்பாக்கம் மருத்துவமனையில் சசிகலாவின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. இதனால், உளவுத்துறை போலீஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். இருப்பினும், சசிகலா ஐந்து நாள்கள் பரோல் முடிந்து சிறைக்குச் செல்லும் வரை உளவுத்துறை 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தி.நகர், பெரும்பாக்கம் என சசிகலாவை கண்காணித்து ரிப்போர்ட் கொடுப்பதில் முழுவீச்சில் மத்திய, மாநில உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

குடும்பத்தில் உள்ள இரண்டு முக்கிய நபர்களை சசிகலா எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது. அவர்களிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சசிகலா, 'நீங்கள் செய்த உள்ளடி வேலைகளால்தான் இந்த நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்' என்று வெளிப்படையாகவே பேசியதாகக் கூறுகின்றனர். அதன்பிறகு, குடும்ப உறவுகளை சமரசப்படுத்திய சசிகலா, சொத்து, பண விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

சசிகலா

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, சென்னை தி.நகரைச் சேர்ந்த ஜூவல்லரி அதிபர் ஒருவர், போயஸ் கார்டனில் செல்வாக்காகத் திகழ்ந்தார். அவர், கூவத்தூர் ரிசார்ட் உறுதிமொழியின்போது, சசிகலா தரப்பை ஏமாற்றியதாகச் சொல்லப்படுகிறது. அந்த நபரை சசிகலா, கடுமையாக எச்சரித்துள்ளார். அவரது வரவு-செலவு கணக்கை முடிக்க உறவுகளிடம் சொல்லியிருக்கிறார். தற்போது, அந்த ஜூவல்லரி அதிபர் தலைமறைவாக இருக்கிறராம். இதனால், சசிகலா தரப்பினரால் அந்த நபரிடம் பேச முடியவில்லை.

இதையடுத்து, சசிகலாவுக்கு நம்பிக்கைக்குரிய நபராகத் திகழும் சென்னையில் உள்ள வடமாநில தொழிலதிபர் ஒருவர், சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்டாராம். தற்போதுள்ள சூழ்நிலையில் சந்திக்க முடியாது என்ற தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தத் தொழிலபதிர், சசிகலாவை சந்திக்க வேண்டும் என்று அடம்பிடித்ததால், வாட்ஸ்அப் அழைப்பில் இருவரும் பேசியதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

இறை நம்பிக்கை அதிகமுள்ள சசிகலா, சென்னைக்கு வந்தபிறகும் தினமும் பூஜை செய்துவருகிறார். சிறையிலிருந்தபோது அவர், சிவலிங்கத்துக்கு பூஜைகள் செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. தற்போதும், அதை அவர் தொடருவதாகச் உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். சசிகலா, முன்பைவிட ஆன்மீகத்தில் அதிகம் நாட்டமாக இருக்கிறராம். நடராசனுக்காக சிறப்பு வழிபாடுகளையும் செய்திருக்கிறார். பரோல் முடிந்து சிறைக்குச் சென்றாலும், நடராசனை உடனிருந்து கவனித்துக்கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார். அப்போது, அவரது கண்கள் கலங்கியுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் குறித்து மூன்று நாள்கள் சசிகலா எதுவும் பேசவில்லையாம். குடும்ப உறவுகளிடம் பேசும்போது, அரசியல் டாப்பிக் வரும்போது அதைத் தவிர்த்துள்ளார்.அமைதியாக இந்த பரோலை முடித்தால்தான் அடுத்த பரோலுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாது என்பதில் சசிகலா தரப்பு கவனமாக இருக்கிறதாம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய உளவுத்துறை உயரதிகாரி ஒருவர், "சசிகலா தங்கியுள்ள தி.நகர் வீட்டை முழுமையாகக் கண்காணித்து வருகிறோம். சசிகலாவை குடும்ப உறவுகளைத் தாண்டி வேறு யாரும் சந்திக்கவில்லை. எங்களின் அனுமதியில்லாமல் அந்த வீட்டுக்குள் யாரும் நுழைய முடியாது. சசிகலா மட்டுமல்ல அவருடன் அந்த வீட்டில் தங்கியிருப்பவர்களையும் நாங்கள் கண்காணித்துவருகிறோம். அந்த வீட்டின் அருகில் உள்ள செல்போன் டவர்களும் எங்களது கண்காணிப்பில்தான் இருக்கின்றன. இதனால், எங்களது கண்காணிப்பை மீறி, சசிகலா யாரையும் தொடர்புகொள்ள முடியாது" என்றார். 


 


டிரெண்டிங் @ விகடன்