ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவர 24 மணி நேரத்துக்குள் அனுமதி! மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கம்போடியாவில் இருக்கும் ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டு வருவதற்குண்டான அனுமதியை 24 மணி நேரத்துக்குள் மத்திய அரசு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீதர்

தேடப்பட்டுவரும் குற்றவாளியான காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தங்கியிருந்தார். இந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, ஸ்ரீதரின் வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் மற்றும் ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி ஆகியோர் கம்போடியா சென்றனர். 6-ம் தேதி ஸ்ரீதரின் இறப்புச் சான்றிதழோடு இந்தியா வந்தார் தனலட்சுமி. ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் கோரிக்கை மனு அளித்தார். ஆனால், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார் தனலட்சுமி. அந்த மனுவை இன்று விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டுவர 24 மணி நேரத்துக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

போலி பாஸ்போர்ட்டில் ஸ்ரீதர் கம்போடியா சென்றுள்ளார். இந்தியாவில் அனுமதி கிடைத்தாலும் கம்போடியாவிலும் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதன்பிறகே ஸ்ரீதரின் உடல் இந்தியா வரும் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!