வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (10/10/2017)

கடைசி தொடர்பு:17:00 (10/10/2017)

கடலுக்குள் சர்வே எண்! - கதிகலங்கும் காசிமேடு மீனவர்கள்

வடசென்னைப் பகுதியில் எண்ணூர் சாலை விரிவாக்கத்துக்காக ஒரு குப்பத்தையே காலிசெய்த அரசு அதிகாரிகள், அந்தக் குப்பத்து மக்களுக்கு கடலுக்குள் நிலப் பட்டா வழங்கி மாற்று ஏற்பாடு வழங்கியுள்ளது மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நல்லதண்ணி ஓடை குப்பம்

வடசென்னை, காசிமேடு அருகே அமைந்துள்ளது நல்லதண்ணி ஓடை குப்பம். இந்தக் கிராமத்தில் மட்டும் 446 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் எண்ணூர் சாலை விரிவாக்கத்துக்காக நல்ல தண்ணி ஓடைக்குப்பம் கிராமத்தில் 36 மீட்டர் அளவுக்கு இடத்தைக் காலிசெய்து தருமாறு அரசு கோரிக்கை வைத்தது. அரசின் கோரிக்கையை ஏற்ற 250 மீனவக் குடும்பங்கள், தங்கள் வீடுகளைக் காலிசெய்து இடத்தை வழங்கியுள்ளனர். தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் முடிவுறும் தருவாயில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 196 மீனவக் குடிசைகளை அரசு அதிகாரிகள் தலைமையில் வந்த குழுவினர் இடித்துள்ளனர். இதற்கு மாற்றாக, நல்ல தண்ணி ஓடைக்குப்பம் கிராம மக்களுக்கு மாற்று நிலத்தையும் வழங்கியுள்ளனர். இந்த நிலத்துக்கான சர்வே எண் நடுக்கடலில் அமைந்துள்ளதுதான் கொடுமை. 

நல்ல தண்ணி ஓடைக்குப்பத்தைச் சேர்ந்த மகேந்திரனிடம் பேசினோம். " நாங்க பாரம்பர்யமா இந்தக் குப்பத்தில்தான் இருக்கோம். சாலை விரிவாக்கத்துக்காக 36 மீட்டர் நீள நிலத்தை போன மார்ச் மாசம் 28ம் தேதி காலிசெய்து கொடுத்தோம். ஆனால், இந்த இடம் போதாதுன்னு, போன 4-ம் தேதி திடீரென வந்த அரசு அதிகாரிகள் ஒட்டுமொத்த கிராமத்தையும் தரைமட்டமாக்கிட்டுப் போய்ட்டாங்க. இப்ப நாங்க தங்கறதுக்குக்கூட இடமில்லாம வெட்ட வெளியில இருக்கோம். வீட்டிலுள்ள கட்டில் சாமான்களை எடுத்துக்கக்கூட கால அவகாசம் தரலை. தியாகராஜசுவாமி கோயில் நிலத்துல வீடு கட்டித் தர்றோம்ன்னு சொன்னாங்க. ஆனா பத்து மாசம் ஆச்சு. இன்னும் ஒரு செங்கல்கூட வச்சுத்தரலை. இன்னொரு அதிகாரிகள் குழு வந்து நிலப்பட்டா, சர்வே எண் எல்லாம் குறிப்பிட்டுப் பேப்பர் கொடுத்தாங்க. அந்த நிலத்தைத் தேடுனா கடலுக்குள்ள இருக்கு" என்றார் வேதனையுடன். 

வைகோ

'வீடில்லாமல் தவிக்கும் எங்களை இந்த அரசு ஏமாற்றுகிறது. நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்' என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவை நேற்று சந்தித்து மனு கொடுத்துள்ளனர் நல்லதண்ணி ஓடைக் குப்ப மக்கள். இந்த சந்திப்புக்குப்பின் நம்மிடம் பேசிய அகில இந்திய பாரம்பர்ய மீனவர் சங்கத் தலைவர் சே.சின்னத்தம்பி, "அரசு நிலம் கேட்டபோது எவ்வித எதிர்ப்பும் இல்லாது கிராம மக்கள் தங்கள் வாழ்விடத்தைக் காலிசெய்து தந்துள்ளனர். ஆனால், ஏழு மாதங்களுக்குப் பின்னர் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ஒரு கிராமத்தையே இடித்துத் தள்ளிவிட்டனர். இந்த மக்களுக்கு எவ்வித மாற்று ஏற்பாடும் செய்துகொடுக்கப்படவில்லை. நீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்து உள்நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். மீனவ மக்களுக்கு முறையான ஏற்பாடுகள் செய்து கொடுக்க வலியுறுத்தி, போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்தப் போராட்டத்துக்கு ம.தி.மு.க ஆதரவு அளிக்கும் என வைகோ உறுதியளித்துள்ளார்" என்றார்.