வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (10/10/2017)

கடைசி தொடர்பு:19:02 (10/10/2017)

“நீங்க பண்ணினது தப்பு டீச்சர்” - வைரல் வீடியோவும் பெண்களின் கொதிப்பும்!

வைரல் வீடியோ

ன்றைய ஹைடெக் யுகத்தில், நாம் செய்யும் ஏதோ ஒரு செயலை வைரலாக்க நினைக்கிறோம். அல்லது, யாரோ ஒருவர் செய்த வைரல் வீடியோக்களை கண்டு மகிழ்கிறோம். தமிழ்நாட்டில் பரவிவரும் டெங்குக் காய்ச்சலைவிடவும், இந்த ‘வைரல் மனோபாவம்’ நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுகொண்டிருக்கிறது. சமீபத்தில், இதே மனோபாவத்துடன் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு வைரலான ஒரு பள்ளிச் சிறுவனின் வீடியோ பதிவு, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோவை பார்க்காதவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்... 

ஒன்றாம் வகுப்பு படிக்கும் வயதுடைய சிறுவன் அவன். அந்த வீடியோவை எடுத்துக்கொண்டிருக்கும் பெண் ஆசிரியரிடம், “உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு டீச்சர். உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் மிஸ்'' என்று கூறுகிறான். அதற்கு அந்தப் பெண் ஆசிரியர் சிரித்தவாரே, ''கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ணுவே?'' என்று கேட்கிறார். அதற்கு அந்தச் சிறுவன், ”மாலை போடுவேன் மிஸ், கட்டிப்புடிப்பேன் மிஸ். உங்க கூடவே இருப்பேன் மிஸ்” என்கிறான். பிறகு, “உங்க புடவை நல்லா இருக்கு மிஸ்’ என்று மறுபடியும் சொல்கிறான். அதற்கு அந்த ஆசிரியர், ''புடவை பிடிச்சிருக்கா... என்னைப் பிடிச்சிருக்கா?'' என்று கேட்கிறார். இரண்டுமே பிடிச்சிருக்கு என்கிறான் சிறுவன். இறுதியில், '‘ஐ லவ் யூ” என்று கூற, அதற்கு அந்த ஆசிரியர் முத்தம் கொடுத்து, “ஐ லவ் யூ டூ” என்று கூறி வீடியோவை முடிக்கிறார். 

என்ன நடத்திருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறதா? அடிப்படைக் கல்வியை கற்பிக்கவேண்டிய பெரிய பொறுப்பில் இருக்கும் ஆசிரியர் ஒருவர், தன் மாணவன் அறியாமையால் சொல்லும் ஒரு விஷயத்தைக் கொண்டாடி, அதை வீடியோவாக்கி பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்க்கும்போது, நிச்சயம் இது தற்செயலாக எடுத்ததுபோல தெரியவில்லை. ஏற்கெனவே அந்தச் சிறுவன் ஆசிரியரிடம் இப்படிச் சொல்லியிருக்கலாம். அதற்கு அந்த ஆசிரியர் முறையாக அணுகுவதை விடுத்து, மறுபடியும் கூறச்சொல்லி வீடியோ எடுத்திருக்கிறார். இது எவ்வளவு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறியாதவரா அந்த ஆசிரியர்? 

சற்றே சிந்தித்துப் பாருங்கள்... இதுவே ஓர் ஆண் ஆசிரியர், தன்னிடம் படிக்கும் சிறுமியிடம் இப்படி நடந்துகொண்டிருந்தால் பெண்கள் எப்படிக் கொதித்திருப்பார்கள்? ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி, ஆண் ஆசிரியரிடம், “நான் உங்களைக் கட்டிப்பிடிச்சுக்கிறேன். ஐ லவ் யூ” என்று கூற, அவரும் முத்தம் கொடுத்து, ''ஐ லவ் யூ டூ” என்று கூறியிருந்தால், ‘சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து வைராலாக்கிய வக்கிர ஆசிரியர்' என்ற தலைப்பில் கதிகலங்கச் செய்திருப்போம். 

அந்தச் சிறுவனின் கோணத்திலிருந்து சிந்தித்துப் பாருங்கள். நாம் பெரும்பாலும் நமக்கு ஆரம்பக் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களைத்தான் வாழ்க்கை முழுவதும் நினைத்து நெகிழ்வோம். ஏனென்றால், அவர்கள் படிப்பை மட்டும் கற்றுத்தருவதில்லை. ஒருவரிடம் எப்படிப் பேச வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும் என ஆரம்பித்து, நம் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்துபவராக இருப்பார். அத்தகைய பொறுப்பில் இருக்க வேண்டியவர், ஒரு மாணவன் திருமணத்தைப் பற்றி பேசியதும், எவ்வளவு பக்குவமான, சரியான கோணத்தில் அணுகியிருக்க வேண்டும்? அப்படி இல்லாமல், நகைச்சுவைபோல வீடியோ எடுத்தது பொறுப்பற்ற செயல்தானே? 

ஒரு தலைமுறைக்கே அடிப்படை கல்வியைப் போதிக்கும் ஆரம்பக் கல்வி ஆசிரியருக்கு இந்தப் புரிதல்கூட இல்லையெனில், எப்படி இவர்கள் பாலியல் கல்வியை கையாள்வார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. 

சாரி டீச்சர்! நீங்க பண்ணினது ரொம்ப ரொம்ப தப்பு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்