வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (10/10/2017)

கடைசி தொடர்பு:17:15 (10/10/2017)

பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயம் தயாரித்து வழங்கிய நடிகர் மயில்சாமி!

டெங்குக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயம் தயாரித்து வழங்கினார் நடிகர் மயில்சாமி. 

டெங்கு விழிப்பு உணர்வு பிரசாரத்தில் மயில்சாமி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் இறந்தும் போயிருக்கின்றனர். நிலவேம்புக் கஷாயம் அருந்துவது டெங்குக் காய்ச்சல் வருவதை தடுக்கும். அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் நடிகர்களில் மயில்சாமி சற்று வித்தியாசமானவர். சமூகப்பிரச்னைகள் குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பவர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றும் தீர்க்கமாகப் பேசுவார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து, தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய களமிறங்கிய அவர், டெங்கு காய்ச்சல் குறித்து தெருத்தெருவாகச் சென்று விழிப்புஉணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுவந்தார். மேலும், தெருத்தெருவாகச் சென்று நிலவேம்புக் கஷாயம் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கினார். 

 

சூட்டிங்கில் டேங்கு கசாயம் வழங்கும் மயில்சாமி

இந்நிலையில், சண்டைக்கோழி-2 படத்தின் சூட்டிங்கில் கலந்துகொள்ளச் சென்ற மயில்சாமி, டெங்குக் காய்ச்சலால் சினிமாக் குழுவினர் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு சூட்டிங்கில் பங்கேற்ற அனைவருக்கும் நிலவேம்புக் கஷாயம் தயாரித்து வழங்கினார். சூட்டிங்கை காணவந்த மக்களுக்கும் நடிகர் மயில்சாமி, விஷால் ஆகியோர் நிலவேம்புக் கஷாயம் வழங்கினர். இதுகுறித்து மயில்சாமி கூறுகையில், ''காய்ச்சல் வந்த பின்னர் கஷ்டப்படுவதைவிட, வருமுன் காப்பதே சாலச்சிறந்தது. சூட்டிங் குழுவினர் அனைவரும் நிலவேம்புக் கஷாயம் அருந்தியிருக்கிறார்களா என்பதுகுறித்து எனக்குத் தெரியாது. என் கையால் வழங்கும்போது அதை நான் உறுதிப்படுத்திக்கொள்வேன். குடும்பத்தைவிட்டு வந்திருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில், நானே நிலவேம்புக் கஷாயம் தயாரித்து வழங்கினேன்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க