குழந்தைக்கு ஜெயலலிதா பெயரைச் சூட்டிய சசிகலா!

                                ஜெயலலிதாவின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சசிகலா

ந்து நாள்  பரோலில், சிறையிலிருந்து வெளியில் வந்த சசிகலா, ஜெயலலிதா பாணியில் குழந்தைகளுக்குப் பெயர்  சூட்டியுள்ளார்.

சென்னை குளோபல் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராசனைப் பார்ப்பதற்காக நிபந்தனை பரோலில் சசிகலா வெளியில் இருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டிருந்தார். இன்னொரு பக்கம் தேசத் துரோக வழக்கில், வெளியில் இருக்கும்  டி.டி.வி.தினகரனை கைது செய்வதில் போலீஸார் வேகம் காட்டினர். நீதிமன்றத்தில் இதற்கு தினகரன் தரப்பு தடை வாங்கியது. சசிகலா சிறையில் இருந்த காலகட்டத்தில், அ.தி.மு.க-வில் பல மாற்றங்கள் நடந்து கட்சியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியிலும் ஆட்சியிலும் ஓரணியாக நிற்கிறார்கள். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சிறையிலிருந்து சசிகலா, ஐந்துநாள் பரோலில் வெளியுலகத்துக்கு வந்திருக்கிறார். ஆதரவாளர்கள் வழிநெடுக உடைத்த தேங்காயும் பூசணியும், காட்டிய சூடமும் சசிகலாவை தற்காலிக சகஜநிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. சென்னை தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டுக்கு முதல்நாள்  இரவு 10 மணிக்கு சசிகலா வந்தார். அடுத்தநாள் காலை குளோபல் மருத்துவமனையில் கணவர் நடராசனைச் சந்தித்தார். பின்னர் வீட்டுக்குத் திரும்பினார். சசிகலாவின் ஒவ்வோர் அசைவையும் உளவுப்பிரிவுப் போலீஸார் கண்காணித்து அதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பி வருகின்றனர். சட்டசபையின் மாடத்துக்கும் சபாநாயகரின் இருக்கைக்கும் சாதாரணமாக வந்துபோனவர் சசிகலா. அப்படிப்பட்டவர் அதே அ.தி.மு.க ஆட்சியைப் பார்த்து கவனத்துடன் செயல்படுகிறார்.

மருத்துவமனையில் இருக்கும் நடராசனுக்கு 'ட்ரக்கியோடமி' கருவி பொருத்தப்பட்டுள்ளதால் அவரால் பேச இயலாத நிலை. ஆனாலும், தினமும் காலை 15 நிமிடங்கள் அருகிலிருந்து கணவரைப் பார்த்து கண்களால் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்கிறார் சசிகலா. மருத்துவமனை வாசலிலும் தி.நகர் வீட்டிலும் சசிகலாவைப் பார்க்க தொண்டர்கள் தவறாமல் வந்துவிடுகின்றனர். இன்றும் அப்படி மருத்துவமனைக்குச் சென்ற சசிகலாவைப் பார்க்க, தொண்டர்கள் திரளாக வந்திருந்தனர். அப்போது தொண்டர்கள் கூட்டத்திலிருந்து இரு தம்பதியர், சசிகலாவை நோக்கி ஓடிவந்தனர். அந்தத் தம்பதியரின் கைகளில் அழகான இரண்டு கைக்குழந்தைகள் இருந்தன. தம்பதியர் ஓடிவந்த காரணத்தைப் புரிந்துகொண்ட சசிகலா, அவர்களை அருகில் அழைத்தார். குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஜெயலலிதா பாணியில் உச்சிமுகந்து முத்தமிட்டார். பின், ஆண் குழந்தைக்கு ஜெயக்குமார் (ஜெயலலிதா அண்ணன் பெயர்) என்றும், பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என்றும் பெயர் சூட்டினார். வழக்கம்போல் அங்கு கூடி நின்ற தொண்டர்கள், `வருங்கால முதல்வர், புரட்சித்தலைவி சின்னம்மா வாழ்க' என்று கோஷங்களைப் போட்டனர். அந்த கோஷம் எழுப்பிய திசையைப் பார்த்து விரக்தியாக ஒரு புன்னகையைத் தவழவிட்டபடி காரில் ஏறினார் சசிகலா. இன்று தி.நகருக்குப் போகும் இந்தக் கார், நாளை போகுமிடம் எதுவென்பதை உணர்வுபூர்வமாக அவரால் மட்டும்தானே உணர  முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!