'அந்த வார்த்தைதான் எங்களைக் கோபப்படுத்தியது'- லாரி ஓனர் கொலையில் கைதானவர்கள் வாக்குமூலம்..!

                               

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திருக்களப்பூர் கிராமத்தில் கடந்த 7-ம் தேதி லாரியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு தார்பாயால் சுற்றப்பட்ட நிலையில் ஆண் சடலம் லாரியில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். அப்போது, கொலை செய்யப்பட்டவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் கிளாட்வின் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீஸார் சந்தேகத்தின்பேரில் லாரியின் ஓட்டுநர்களான ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் செல்வம் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

                             


அவர்கள் அளித்த பகீர் வாக்குமூலத்தில், 'லாரி உரிமையாளர் கிளாட்வின் திருட்டு மணல் எடுத்து விற்பனை செய்துவந்தார். பணம் அதிகமாக சம்பாதித்தார். இதனால் சம்ளபத்தை உயர்த்தித் தரும்படி கிளாட்மினிடம் கேட்டோம். அவர் தரமறுத்துவிட்டார். கிளாட்வினுக்கு என்று யாரும் கிடையாது. இதனால் அவரை தீர்த்துக்கட்டி லாரி ஓனராக முடிவு செய்தோம். அந்த ஆசையில் அவரைக் கொலை செய்தோம்' என்று கூறியுள்ளனர். இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காவலர்களிடம் அவர்கள் அளித்த வாக்குமூலம் அதிர்சியடைய வைத்துள்ளது. 'நாங்கள் கிளாட்வின்னிடம் நான்கு மாதத்துக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்தோம். அன்றிலிருந்தே கடுமையாக உழைத்தோம். எங்களுடைய உழைப்பால் கிளாட்வின் அதிகமாக லாபம் அடைந்தார். நாங்கள் இருவரும் இரவு பகலாக உழைக்கிறோமே, எங்களுக்குச் சம்பளத்தை உயர்த்தித் தரக் கூடாதா என்று கேட்டோம். அதற்கு அவர், 'நீங்க பார்க்கிற வேலைக்கு உங்களுக்கு சம்பளத்தை ஏத்தி தரனுமானு' கெட்டவார்த்தையில் திட்டினார். அந்த வார்த்தை எங்களைக் கோபப்படுத்தியது. அன்று இரவே கிளாட்வின்னைக் கொன்று ஆண்டிமடம் பகுதியில் உள்ள முந்திரித் தோப்பில் புதைப்பது என்று திட்டம் தீட்டினோம்.

நாங்கள் திட்டமிட்டபடியே கிளாட்வின்னை அழைத்துச் சென்றோம். ஜெயங்கொண்டத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தாண்டியதும் கிளாட்வின்னை கொன்றுவிட்டு முந்திரித் தோப்பில் புதைக்க லாரியை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது லாரி பழுதாகி திருக்களப்பூர் என்ற இடத்தில் நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் லாரியை எடுக்க முடியவில்லை. பொழுது விடிந்தால் நாங்கள் மாட்டிகொள்வோம் என்று பயந்துகொண்டு உடலை தார்பாயிலில் சுற்றி வைத்துவிட்டு ஓடிவிட்டோம்" என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!