வெளியிடப்பட்ட நேரம்: 19:47 (10/10/2017)

கடைசி தொடர்பு:22:12 (10/10/2017)

'ஐ.ஐ.டி-யில் 517 விலங்குகள் உயிரிழப்பு!' - எச்சரித்த வனத்துறை

சென்னையில் 236 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் கலை மான்கள், புள்ளி மான்கள், குள்ள நரிகள், காட்டுப் பூனைகள் உள்ளிட்ட பல அரிய வகை வன உயிரினங்கள் உள்ளன. இந்நிலையில் அங்கு உள்ளவர்களால் உருவாக்கப்படும் குப்பைகளாலும், அங்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளாலும் வன உயிரினங்கள் பல இறந்துள்ளன என்ற தகவல் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. எனவே, வன உயிரினங்களைக் காப்பதற்காக வனவிலங்கு ஆர்வலர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உதவியை நாடியுள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி

இதுகுறித்து வன விலங்கு ஆர்வலர் கிளமென்ட் ரூபின் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரிடம் பேசியபோது, "சென்னை, ஐ.ஐ.டி வளாகத்தில் உருவாகும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால், அங்கு இருக்கும் வன உயிரினங்களுக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஐ.ஐ.டி வளாகத்தில் எந்த ஒரு கட்டடமும் கட்டப்படக் கூடாது என்று வனத்துறை ஆணையே பிறப்பித்துள்ளது. ஆனால், அதையும் மீறி இதுவரை 10 கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளன. இதனால், அங்கு உருவாகும் குப்பையின் அளவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், ஐ.ஐ.டி வளாகத்தில் சேரும் குப்பைகளை சென்னை மாநகராட்சி அகற்றுவதில்லை. குப்பைகள் அகற்றப்படுவதற்காக 15 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் ஒன்று தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனாலும் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. மிக முக்கியமாக, ஐ.ஐ.டி வளாகத்துக்குள் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் 'சாராங்' நிகழ்ச்சியால் விலங்குகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. அதை உள்ளே நடத்துவதனால்தானே பிரச்னை. எனவே, அந்த நிகழ்ச்சியை வெளியே நடத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்நிலையில், மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக தமிழக வனத்துறை ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரையில் ஐஐடி வளாகத்தினுள் 517 விலங்குகள் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அபாயகரமான நிலை என்று அறிவித்து, பல பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிக்க ஐ.ஐ.டி நிர்வாகத்தை அறிவுறுத்தியுள்ளது வனத்துறை. தற்போது இதன் உச்சகட்டமாக, ஐ.ஐ.டி. வளாகத்தில் வாழும் வன உயிரினங்களைக் காக்கத் தவறினால் அனைத்து விலங்குகளையும் கிண்டி தேசியப் பூங்காவுக்கு இடமாற்றம் செய்ய நேரிடும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை வெறும் ஒரு எச்சரிக்கை என்றெண்ணி மறுதலித்து விட முடியாது. ஐ.ஐ.டி வளாகத்தினுள் இருக்கும் அனைத்து வன உயிர்களையும் கிண்டி தேசியப் பூங்காவுக்கு மாற்றும் அளவுக்கு அங்கு போதிய இடவசதி இல்லை. மேலும், இவ்வாறு வன விலங்குகள் மாற்றப்படும் பட்சத்தில் ஐ.ஐ.டி-யின் பல்லுயிர்ச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும்" என்று வேதனை தெரிவித்தார்.

பிளாஸ்டிக் கப்பை உண்ணும் மான்

இந்நிலையில், ஐஐடி வளாகத்தினுள் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தான வழக்கு நேற்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை சார்பில், 'வளாகத்துக்குள் பிளாஸ்டிக் குப்பை இல்லாதவாறு பார்த்துக் கொள்ள ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஐ.டி வளாகத்துக்குள் 24 மணி நேரமும் செயல்படும்படியான கால்நடை மருத்துவமனையை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டப்பட்டால், வளாகத்தில் இருக்கும் வனவிலங்குகள் அனைத்தையும் கிண்டியில் இருக்கும் தேசியப்  பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்படும்' என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.