ஹஜ் மானியம் ரத்து செய்யப்படும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

ஹஜ் பயணம் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவு கண்டிக்கத்தக்கது. இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்தைத் தொடர வழிவகைகளை ஏற்படுத்தித் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'இஸ்லாமியர்கள் தங்களது மார்க்கத்தின்பால் பற்றுகொண்டு மேற்கொள்ளும் ஹஜ் புனிதப்பயணத்துக்கான மானியத்தை அடுத்தாண்டு முதல் ரத்து செய்வதாக முடிவெடுத்திருக்கும் மத்திய அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. பொருளாதாரச்சரிவிலும், விலைவாசி உயர்விலும் நாடு முற்றுமுழுதாய் தத்தளித்துக் கொண்டிருக்கிற வேளையில் மத்தியில் ஆளும் மோடி அரசானது மக்களின் உணர்வலைகளை மடைமாற்றம் செய்வதற்கு மத ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

ஹஜ்

ஹஜ் பயணத்துக்காகக் கடல்வழியே சென்றவர்களின் வசதிக்காக வானூர்தி சேவைகள் தொடங்கப்பட்டபிறகு ஏற்படும் கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட மத்திய அரசால் வழங்கப்படும் மானியத்தையே ஹஜ் மானியம் என்கிறோம். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 70 ஆயிரம் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டுத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றமானது, ஹஜ் மானியத்தை வரும் 2022-க்குள் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, ஹஜ் பயணம் தொடர்பாகப் புதிய கொள்கையை உருவாக்க முன்னாள் செயலாளர் அப்சல் அமானுல்லா தலைமையிலான ஒரு குழுவை மத்தியில் ஆளும் மோடி அரசு அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையின்படி, வரும் 2018-ம் ஆண்டுக்குள் ஹஜ் பயணத்துக்கான மானியத்தை ரத்து செய்வதாய் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்திருக்கிறார். இது நாடு முழுக்கப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தோடு ஹஜ் பயணத்துக்காக இருந்த 21 புறப்பாட்டு இடங்களை 9 ஆகக் குறைக்கவும் முடிவுசெய்திருப்பது இந்தியாவின் பன்மைத்துவத்துக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரான ஒன்றாகும்.

ஹஜ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுத்த மத்திய அரசானது ஹஜ் மானியம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே முதன்மையாகக் காட்டி ஆலோசனைக் குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த முற்படுவது மதரீதியிலான உள்நோக்கம் கொண்டதாகும். இம்முடிவானது ஜனநாயக வழியில் மேற்கொள்ளப்படும் ஓர் சர்வாதிகாரமாகும். ஆகவே, ஹஜ் பயணம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசானது மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும், இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்தைத் தொடர வழிவகைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!