வெளியிடப்பட்ட நேரம்: 21:14 (10/10/2017)

கடைசி தொடர்பு:21:14 (10/10/2017)

குட்கா ஊழல் புகாரில் எஃப்.ஐ.ஆர்.! சிக்கிய மீன் குஞ்சுகள்,  தப்பிய முதலைகள்...

                                      குட்கா குற்றச்சாட்டை முன்வைக்கும் ஸ்டாலின்

குட்கா ஊழலில் லஞ்ச ஒழிப்புத்துறை 17 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறது... 'பெரிய முதலைகளை தப்பிக்க வைத்துவிட்டு மீன்குஞ்சுகளை சிரமப்பட்டு பிடித்தது போல் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்' என்ற குரல், எதிர்க்கட்சிகளின் மத்தியில் கேட்க ஆரம்பித்திருக்கிறது. இன்னொரு பக்கம், போலீஸார் மீது  எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட தகவல், தமிழக அரசியல்- காவல் வட்டாரத்தை உஷ்ணமாக்கி  வைத்துள்ளது. 

தடை செய்யப்பட்ட 'பான் குட்கா'-வை சத்தமே இல்லாமல் மார்க்கெட்டில் விட பல கோடிகளை 'இவர்கள்' லஞ்சமாக வாங்கினர்... என்ற குற்றச்சாட்டை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சொல்லி வருகிறார் மு.க.ஸ்டாலின். இவர்கள் என்று ஸ்டாலின் குறிப்பிட்ட பட்டியலில் அமைச்சர், ஐ.பி.எஸ். அதிகாரிகள், சில தரகர்கள் என்று பெரிதாக நீள்கிறது. குற்றச்சாட்டை முன் வைப்பது நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதைபதைப்பு  இன்றுவரை யாரிடமும் இல்லை என்பதே மிகப் பெரிய நெருடல். உள்ளூர் வார்டு உறுப்பினர், வார்டு செயலாளர் மீது கட்சிப் போஸ்டர் போடுவதில் குற்றச்சாட்டு சொன்னது போன்ற அந்தப் புகாரை கவனித்தது அ.தி.மு.க. அரசு. சென்னை மெரினா கடற்கரையில் சமாதியாக  இருக்கிற ஜெயலலிதாதான், பான் குட்கா போதையில் சிக்கி  நாட்டில் பலர் சமாதி ஆகிக் கொண்டிருப்பதை தடுக்கும் சட்டத்தை, 2013-ல் கொண்டு வந்தார்.  தமிழக முதல்வராக இருந்தபோது, 110- விதியின் கீழ் குட்கா, பான் மசாலா பொருள்களைத் தயாரிக்க, சேமித்து வைக்க, விற்பனை செய்ய, தடை விதித்து உத்தரவிட்டார்.  'ஜெயலலிதாவின் வழி நடப்பதாகச் சொல்லும் ஆட்சியில் பான் குட்கா தடையே இல்லாமல் கிடைக்கிறது' என்ற குற்றச்சாட்டுடன் பான் குட்கா சரங்களைக் கொண்டுவந்து,  சில மாதங்களுக்கு முன் கோட்டையிலேயே ஸ்டாலின் காட்டினார். அதேபோன்று  ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் விடாமல் பான் குட்கா குறித்து பேசியபடி இருந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், பான் குட்கா வழக்கில் தற்போது, முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குநர் மஞ்சுநாதா, "குட்கா விவகாரத்தில் 2 காவல்துறை அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேரடியாக லஞ்சம் பெற்றதாக கருதப்படும் நபர்கள் மீது மட்டுமே இதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றிருக்கிறார். இதுகுறித்து மு.க. ஸ்டாலின், வெளியிட்ட அறிக்கையில்,  "பான்குட்கா  மாமூல் பற்றிய விசாரணை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இரண்டு போலீஸ் டி.ஜி.பி-க்களின் பெயர்கள் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை. இடைநிலை மற்றும் கடை நிலை போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளதாக இன்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார். நாட்டின் பொருளாதாரத்தை நிரந்தரமாகக் கொன்று கொண்டிருப்பது ஊழல்... தற்காலிகமாக இப்போது மக்களைக் கொன்று கொண்டிருப்பது டெங்கு... இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவை...