'ஜனநாயக முறையில் பணியாற்ற வேண்டும்...' - கவர்னருக்கு அட்வைஸ் செய்த திருமாவளவன் | Should work as per democracy, Tirumavalavan advices TN Governor

வெளியிடப்பட்ட நேரம்: 23:20 (10/10/2017)

கடைசி தொடர்பு:23:20 (10/10/2017)

'ஜனநாயக முறையில் பணியாற்ற வேண்டும்...' - கவர்னருக்கு அட்வைஸ் செய்த திருமாவளவன்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வி உரிமை கருத்தரங்கில் கலந்துகொண்ட தொல்.திருமாவளவன், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற போதிய நிதி இல்லாமல் எடப்பாடி அரசு திணறி வருகிறது. தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்தும், மத்திய அரசு கொஞ்சம்கூட மாநில அரசின் கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. விவசாயிகளின் நிலத்தை பாழாக்கும் திட்டமான கெயில் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்கு விவசாயிகளை ஒன்று திரட்டி போராடுவோம். புதிய கவர்னர் தமிழகத்தில் பதவியேற்றுள்ளார். அவர் அரசியல் சட்ட அமைப்புத்திட்டத்தின் கீழ் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். 

 திருமாவளவன்

டெங்கு நோயால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய அரசு தலையிட்டு போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைச் செய்யாமல் மத்திய அரசு, மாநில அரசு மீதே பழி போட முயற்சிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடுவது சட்ட விரோதமானது. ஆறு மாதங்களுக்கு மேல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் இருப்பது ஜனநாயகத்துக்கு முரணானது. இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் எடப்பாடி அரசு தயக்கம் காட்டி வருகிறது. எனவே, உள்ளாட்சித் தேர்தலை ஆளும் எடப்பாடி அரசு விரைந்து நடத்தி முடித்திட வேண்டும்.

கேரளத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. எல்லாத் திட்டங்களுக்கும் தமிழ்நாடு முன்னோடி என்பதுபோல தலித்துகள் மற்றும் பிற சமூகத்தினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. ஆனால், இதற்கு சிலர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். தடை ஆணையை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து ஜனநாயக ரீதியில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்' என்று பேசினார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க