'குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை' - அன்புமணி வலியுறுத்தல்!

'குட்கா ஊழல் விவகாரத்தில் உண்மை வெளிவர சி.பி.ஐ விசாரணை தேவை' என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

குட்கா விற்பனையை சட்டவிரோதமாக அனுமதிப்பதற்காக, குட்கா நிறுவனங்களிடமிருந்து சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதுகுறித்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் முதல் எதிரியாகச் சேர்க்கப்படவேண்டிய அமைச்சரையும், காவல் உயரதிகாரிகளையும் சேர்க்காதது கண்டிக்கத்தக்கது.

அன்புமணி

தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக, தமிழகக் காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப்பிரிவு கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளது. தமிழக காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, சென்னை மாநகராட்சி, வணிகவரித்துறை, மத்திய கலால்துறை ஆகியவற்றில் பணியாற்றும் 17 அதிகாரிகள் மட்டுமே இந்த வழக்கில் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருமே உதவி ஆணையர்கள் மற்றும் அதற்குக் கீழ் உள்ள அதிகாரிகள் ஆவர். சட்டவிரோதமாக குட்கா விற்க அனுமதி தரும் அதிகாரம், இந்த அதிகாரிகளில் ஒருவருக்குக்கூட இல்லை. இவர்கள் அனைவருமே குட்கா ஊழலின் முதன்மை எதிரிகளான சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை மாநகரக் காவல் ஆணையர்களாகப் பணியாற்றிய இரு உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு உடந்தையாகவும், உதவியாகவும் மட்டுமே இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமானவரித்துறை ஆய்வு நடத்தப்பட்ட குட்கா நிறுவனத்தின் பங்குதாரரான மாதவராவ் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், ஒவ்வொரு மாதமும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.14 லட்சம், மத்திய கலால் அதிகாரிகளுக்கு ரூ. 2 லட்சம், மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு ரூ. 3.5 லட்சம், வட சென்னை இணை ஆணையருக்கு ரூ.5 லட்சம், செங்குன்றம் உதவி ஆணையருக்கு ரூ.10 லட்சம், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரூ. 7 லட்சம், சென்னை மாநகர காவல் ஆணையர்களுக்கு ரூ.20 லட்சம் கையூட்டு கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதுதவிர, பல்வேறு தருணங்களில் சென்னை காவல் ஆணையராக இருந்த இரு அதிகாரிகளுக்கு, முறையே ரூ.1.40 கோடி, ரூ.75 லட்சம் கையூட்டாக வழங்கப்பட்டதாகவும் ஒட்டு மொத்தமாக ரூ.39.91 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக மாதவராவ் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தும் வருமானவரித்துறையின் புலனாய்வுப்பிரிவு முதன்மை இயக்குநர் பாலகிருஷ்ணன், ஆகஸ்ட் 12-ம் தேதி தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவை கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கொடுத்துள்ளார். இந்த அறிக்கை, அப்போதைய காவல்துறை தலைமை இயக்குநர் அசோக் குமாருக்கும் அனுப்பப்பட்டது. அமைச்சரும், காவல்துறை உயரதிகாரிகள் இருவரும்தான் இந்த ஊழலில் சூத்திரதாரிகள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ள நிலையில், அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்படாதது ஏன்? அதுமட்டுமன்றி, இதுதொடர்பாக எவரும் கேள்வி எழுப்பிவிடக்கூடாது என்பதற்காக, வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஆதாரங்கள் இருந்தால், அமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இவையெல்லாம் எதிர்க்கட்சிகளின் வாயை மூடும் தந்திரமே தவிர, உண்மையான அக்கறை அல்ல.

குட்கா ஊழல்குறித்த ஆதாரங்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானதிலிருந்தே அந்த ஊழல்குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பா.ம.க நிறுவனர் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். இவ்வழக்கில், காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், டி.ஜி.பி. நிலையிலுள்ள அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்காவிட்டால் விசாரணை முறையாக நடக்காது என்று மருத்துவர் ராமதாஸ் கூறினார்.

மருத்துவர் ராமதாஸ் கூறியதுதான் இப்போது நடந்திருக்கிறது. ஊழல் புலிகளை விட்டுவிட்டு, எலிகள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இவ்வழக்கை காவல்துறை விசாரித்தால் உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள் என்ற குற்றச்சாற்று உண்மையாகியுள்ளது. எனவே, இந்த ஊழலில் உண்மை வெளிவர வேண்டுமானால், அமைச்சர் விஜயபாஸ்கரையும், காவல்துறை உயர் அதிகாரிகள் இருவரையும் இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும். அத்துடன், குட்கா ஊழல் வழக்கை நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!