காய்ச்சலால் பள்ளி மாணவி மரணம் - திருப்பூரில் மேலும் ஒரு சோகம்..!

திருப்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஏஞ்சல், காய்ச்சல் காரணமாக இன்று கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

திருப்பூரைச் சேர்ந்த பொன்னாபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருபவர், பனியன் தொழிலாளி ஏசுதாஸ். இவரது மகள் எப்ஷிபா ஏஞ்சல்,  முதலிபாளையத்தில் இயங்கிவரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்றுவந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழக்கம்போல பள்ளிக்குc சென்ற மாணவி ஏஞ்சலுக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அவரை மருத்துவ சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.
பின்னர், அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், மேல் சிகிச்சை அளிக்கவேண்டி இருந்ததால், நேற்று இரவே கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நேற்று இரவு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தொடரப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் மாணவி ஏஞ்சலின் உயிர் பிரிந்தது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மூளைக்காய்ச்சல் காரணமாகவே மாணவி ஏஞ்சல் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தாலும், மாணவியின் மரணத்துக்கு டெங்கு காய்ச்சல்தான் காரணம் என்றும்,  மருத்துவர்கள் அதை திட்டமிட்டே மறைகின்றனர் என்றும் பெற்றோர் தரப்பில் புகார் கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில், மாணவி ஏஞ்சல் படித்த அதே பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்றுவரும் மற்றொரு மாணவியும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவரையும் கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

மாணவி ஏஞ்சல் படித்த முதலிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்ட வண்ணம் இருப்பதாகவும், பள்ளியின் முன்பாக தேங்கிநிற்கும் கழிவுநீரை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் நேற்றைய தினம் ஊராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!