’குமரியில் டெங்கு காய்ச்சல் அபாயம்’ -தி.மு.க ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சியில் கழிவு நீர் ஓடைகளைச் சுத்தம் செய்ய, அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி பல முறை வலியுறுத்தியும் அதை  நிறைவேற்றாததால், அந்தப் பகுதியில் டெங்கு காய்ச்சல் மக்களைப் பாதித்துவருகிறது. அதனால், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து தோவாளை ஒன்றிய தி.மு.க சார்பில், ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தத் தகவலறிந்து வந்த கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், சுகாதாரச் சீர்கேடு பற்றி விளக்கம் கேட்டார். பிறகு, இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டுப் போவதில்லை எனக் கூறி, அங்கு பொதுமக்களோடு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பெர்ச்சுவல் ரோஸிட்டா வந்து போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்கள் அந்தப் பகுதி பிரச்னைகளை எடுத்துக் கூறினர். குறிப்பாக, கழிவுநீர் ஓடை, மாதக்கணக்கில் நிறைந்து கிடப்பதையும் கழிவுநீர்,  குடிநீர்க்குழாய் அருகே செல்வதையும் தெரியப்படுத்தினர்

இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, டெங்கு காய்ச்சல் பாதித்து, ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையிலும்  பலர் சிகிச்சைபெற்று வருவதையும், குவிந்துகிடக்கும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதையும், அதிகாரி ரோஸிட்டாவிடம் மக்கள் தெரிவித்தனர். மேலும், தெருக்களின் சாக்கடை நிலை, தோவாளைப் பகுதியில் கிட்டத்தட்ட 6, 7, தெருக்கள் சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கிக் கிடக்கும் நிலைமைகுறித்து அவருக்குத் தெரியப்படுத்த, அவரை அழைத்துச்சென்று காண்பித்தனர். இதற்குரிய தீர்வு விரைவில் எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் பெர்ச்சுவல் ரோஸிட்டா கூறியதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!