வெளியிடப்பட்ட நேரம்: 08:49 (11/10/2017)

கடைசி தொடர்பு:11:23 (11/10/2017)

சசிகலாவின் பரோல் ஓவர்! இன்று என்ன திட்டம்?

சசிகலா

சிகலா பரோலில் வந்து நான்கு நாள்கள் ஆகின்றன! அவரின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் சசிகலா தற்காலிகமாகத் தங்கியிருக்கிறார். "இந்த நான்கு நாள்களில், உறவினர்களின் செல்போனில் எடப்பாடி கோஷ்டி அமைச்சர்கள் ஆறு பேருடன் தொடர்புகொண்டு சசிகலா பேசினார். அதே பாணியில் 25 எம்.எல்.ஏ-க்களுடனும் தகவல் பரிமாற்றம் நடந்தது" என்றெல்லாம் டி.டி.வி. தினகரன் கோஷ்டியினர், மீடியாக்களிடம் தகவல்களைச் சொல்லி வருகிறார்கள். 

ன்று ஒருநாள்தான் பாக்கி... சசிகலா பரோல் முடிந்து பெங்களூரு சிறைச்சாலைக்குப் போகப்போகிறார்...! அவர் கிளம்பும்போது, அவரைச் சந்திக்க, சில அமைச்சர்கள் ரெடியாகிறார்கள் என்று உளவுத்துறையினர் எடப்பாடியை எச்சரிக்க... 'அன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும்' என்று அவர் அறிவித்துவிட்டார். சசிகலா கோஷ்டி பக்கம் சாய இருந்த சில அமைச்சர்களுடன் சமாதானமும் பேசிவிட்டாராம் எடப்பாடி. தற்போதைய சூழ்நிலையில், அந்த அமைச்சர்கள் மதில்மேல் பூனையாக ஒதுங்கி நிற்கிறார்கள். அரசியல் நீரோட்டத்தைப் பார்த்து, அதற்கேற்ப பயணிக்க அவர்கள் முடிவு செய்துவிட்டனர். இப்போதைக்கு எடப்பாடி கோஷ்டியை தொடர்ந்து  ஆதரிக்கிறார்கள். 

குளோபல் மருத்துவமனைக்கு சசிகலா வந்தபோது என்ன நடந்தது?

டாக்டர் முகமது ரீலா தலைமையிலான குழுவினர், சசிலாவிடம் நடராசன் உடல்நிலை பற்றி எடுத்துச் சொன்னார்கள். "இது எங்களுக்கு மருத்துவரீதியாக சவாலான ஆப்ரேஷன்" என்று சொன்னபோது, சசிகலா ஆச்சர்யத்தோடு உற்றுக் கவனித்தாராம். நடுவில், சசிகலாவும் நிறைய கேள்விகளைக் கேட்டாராம். நடராசன் உடலிலிருந்து அகற்றப்பட்ட கல்லீரலை பத்திரப்படுத்தி வைத்திருந்த டாக்டர்கள், அதை சசிகலாவிடம் காட்டியதுடன், நல்ல நிலையில் உள்ள கல்லீரலையும் காட்டியுள்ளனர். "உங்கள் கணவரின் கல்லீரல்... முழுவதுமாக 'ஃபெயிலியர்' ஆகிவிட்டது. 14 மணிநேரம் ஆபரேஷன் நடத்தி, அவருக்கு மாற்று கல்லீரலையும், சிறுநீரகத்தையும் பொருத்தினோம்" என்றார்களாம். டாக்டர்கள் சொன்னதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டாராம் சசிகலா.

மேலும், "புதிதாகப் பொருத்தப்பட்ட சிறுநீரகம், நடராசன் உடலுடன் இணைந்து சரியாக வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது. கல்லீரல் செயல்படும்விதம் தெரிய ஒரு வாரம் ஆகும்" என்றார்களாம். "எங்கள் அட்வைஸை நடராசனும், குடும்ப உறுப்பினர்களும் சரியாகப் பின்பற்றினால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவரின் உடல் நலத்திற்கு நாங்கள் கேரண்டி" என்று உறுதியாக டாக்டர்கள் சொன்னதாக சசிகலா குடும்பத்தினர் பேசிக் கொள்கிறார்கள். ஒருகட்டத்தில், சசிகலா, அவரது குடும்பத்தினர் பக்கம் திரும்பி, "ஏன் இந்த நிலை? ஆரம்பத்திலேயே மருத்துவமனையில் அவரைக் காட்டவில்லையா?" என்று கேட்டாராம்.

நடராஜன்"நான்கு மாதங்களுக்கு முன்பு, நடராசன்...கொஞ்சம் நல்ல நிலையில்தான் இருந்தார். அப்போதே 'கல்லீரலில் பிரச்னை' என்று எங்களுக்குத் தெரியும். அது வலுவிழக்கும்போது மாற்றிக்கொள்ளலாம் என்று டாக்டர்கள் தெரிவித்ததுடன், தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால், ஒரே மாதத்தில் கல்லீரல் செயல்பாட்டை இழந்து விட்டது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்றார்களாம். மேலும், "மாற்றுக் கல்லீரல், சிறுநீரகம்... இரண்டும் நடராசனுக்குத் தேவைப்பட்டது. சட்ட விதிமுறைகளின்படி, அதற்காகப் பதிவு செய்துவிட்டு, சில மாதங்கள் காத்திருந்தோம்.

இந்த மருத்துவனைக்கு வந்தபிறகு, தினமும் நாலு முறை ரத்த வாந்தி எடுத்தார். மிகவும் பயந்து விட்டோம். 'மல்டி ஆர்கன் தேவை' என்று பதிவு செய்தவர்களுக்குச் சட்டப்படி முன்னுரிமை தரவேண்டும். ஆனால், எடப்பாடி அரசு. அதைக் கண்டு கொள்ளவேயில்லை. ஐந்துமுறை ஆர்கன் கிடைக்கும் சந்தர்ப்பம் வந்தது. ஆனால், தரவில்லை. ஆறாவது முறைதான் அனுமதித்தார்கள்" என்று விவரமாக எடுத்துச் சொன்னார்களாம் உறவினர்கள். 

"டிஸ்சார்ஜ் ஆகி நடராசன் வீட்டுக்கு வரும்போது, அங்கே ஐ.சி.யூ. போல மாறுதல் செய்திருக்க வேண்டும். இன்னும் சில மாதங்களுக்கு அவரின் உடல்நிலையை மிக கவனத்துடன் தொற்று பரவாமல் நாம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். டாக்டர்கள் தெரிவிக்கும் அட்வைஸை சரியாகப் பின்பற்ற வேண்டும்" என்றாராம் சசிகலா. அவரது  குடும்பத்தினர் அதற்கு தலையாட்டினார்களாம். 

கிருஷ்ணப்ரியா வீட்டில் யாருடனும் சசிகலா பேசவில்லை என்கிறார்கள். பெரும்பாலும் சசிகலாவின் பதில் மௌனம்தான். சிலர் பேசும்போது, கையால் சைகை காட்டி, அவரின் பதிலைப் புரியவைத்தாராம். உதாரணத்துக்கு, டெங்குக் காய்ச்சலில் நூற்றுக்கணக்கான மக்கள், இறந்து போகிற சம்பவங்களையும், அதுபற்றி எடப்பாடி அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதையும் டெல்டா பிரமுகர், கண்ணீருடன் எடுத்துச் சொன்னாராம். சீரியஸான முகத்துடன் கேட்டுக்கொண்டு, 'அம்மா நிச்சயம் சரிசெய்வார். அவரைப் பிரார்த்தனை செய்யுங்கள்' என்று சைகை மூலம் சொன்னாராம். "அமைச்சர்களின் செயல்பாடு, லட்சணம் தெரிந்து, முதல்வராக அம்மா இருந்தபோது, எல்லாத் துறைகளையும் அவர்தான் கவனித்து வந்தார். அமைச்சர்களுக்கு விவரம் தெரியாது. அம்மா, கோட்டைக்குப் போய்விட்டால் பணியில் மூழ்கிவிடுவார். பத்து, பதினைந்து முறை போன் மூலம் அழைப்பு விடுத்தவண்ணம் இருப்பேன். அப்புறம்தான்... வீடு ஞாபகமே அம்மாவுக்கு வரும்" என்று சொல்லியபோது, சசிகலா கண்ணில் நீர் துளிர்த்ததாம்.

சசிகலாவைச் சந்திக்க அவரது தம்பி திவாகரன் வரவில்லை. நடராஜன் குளோபல் மருத்துவமனையில் அட்மிட் ஆனதிலிருந்து சசிகலா வரும்வரை, அடிக்கடி திவாகரன் வந்து சென்றார். ஆனால், சசிகலா பரோலில் வந்த பிறகு, அவரை இன்னும் திவாகரன் சந்திக்கவில்லை. காரணம், திவாகரனுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாம். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் டெங்குக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாகச் சொன்னார்களாம். அதன்காரணமாகவே, அவர் சசிகலாவைச் சந்திக்க வரவில்லையாம். சசிகலா இன்று கிளம்பும்போது, அவரை திவாகரன் சந்திப்பாராம்.

திவாகரன்

சசிகலாவின் கேள்விகள்?

"நான் சிறைச்சாலைக்கு செல்லும்முன், போயஸ்கார்டன் முகவரிதான் நிரந்தரம் என்று சிறை ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளேன். பரோலில் போகும்போது, அதே முகவரிதானே என்னுடையது? அங்கேதானே என்னைத் தங்க அனுமதிக்க வேண்டும். ஏன் அங்கே தங்கக் கூடாது என்கிறார்கள்? நான் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கப்போகிறேன். எனக்குச் சிறைச்சாலை விதித்த கண்டிஷன்களை நான் நிச்சயமாக ஃபாலோ பண்ணுவேன்... ஆனால், அதெல்லாம் என் வீட்டில் இருந்தால்தானே முடியும்? நான் உறவினர் வீட்டில் இருக்கும்போது, அந்த உறவினரைப் பார்க்க விசிட்டர்கள் வருவார்கள். கட்சி நிர்வாகிகள் வருவார்கள. எத்தனையோ பேர் வரும்போது, சிறைச்சாலை கண்டிஷன்களை அவர்கள் ஏன் பின்பற்றவேண்டும்?" என்று கேட்டாராம். இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர்களில் ஒருவர், "இல்லம்மா... போயஸ்கார்டன் பங்களா யாருக்குச் சொந்தம் என்கிற சட்ட சர்ச்சை நிலவுகிறது. அதனால், அங்கே உங்களைத் தங்க அனுமதிக்கமாட்டார்கள்" என்றாராம். "சசிகலா ஏதும் பேசவில்லையாம்". 

கட்சி அமைப்பில் நிறைய மாறுதல்கள் செய்ய சசிகலா வரவை எதிர்நோக்கி காத்திருந்தாராம் தினகரன். ஏனென்றால், சசிகலா சிறைச்சாலையில் இருக்கும்போது, அவரின் ஒப்புதலோடு என்கிற வார்த்தையைப் போட்டுதான் கட்சி நிர்வாகிகள் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பான அறிவிப்புகளைத் தினகரன் வெளியிட்டு வந்தார். சசிகலாவே பரோலில் வருகிறார் என்பதால், சசிகலா பெயரிலேயே அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டிருந்தாராம் தினகரன். ஆனால், 'சிறைக்கண்காணிப்பாளர் கண்டிஷன்களைப் பார்த்தபிறகு, அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே?' என்கிற ஆதங்கம் அவருக்கு! 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம் முடிவுக்கு வந்தவுடன் பொதுக்குழுவை கூட்ட, தினகரனுக்கு சசிகலா பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். அதற்கான பூர்வாங்க வேலைகளை திவாகரன் தரப்பினர் செய்ய ஆரம்பித்துவிட்டனர். 'தேர்தல் கமிஷனுக்குச் சரியான பாடம் புகட்டுவதே அடுத்த இலக்கு' என்று தினகரன் தரப்பினர் சொல்லிவருகிறார்கள்.

இன்று நண்பகல் சென்னையிலிருந்து சசிகலா கிளம்ப உள்ளார். குறுகிய காலமே பரோலில் வந்திருந்தாலும், தமக்கு அ.தி.மு.க வட்டாரத்தில் இருக்கும் செல்வாக்கை சசிகலா புரிந்து கொண்டார் என்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்