வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (11/10/2017)

கடைசி தொடர்பு:10:39 (11/10/2017)

’எங்களுக்கும் குடும்பம், குழந்தை குட்டிகள் இருக்கிறதுதானே!’ : குமுறும் போலீஸ்!

"சார், தீபாவளி போனஸ் வாங்கியாச்சா.. அப்படியென்றால், எங்களையும் கொஞ்சம் கவனிக்கிறது" என்று வழியில் போகிற, வருகிறவர்கள் எல்லாம் வெறுப்பேத்துகிறார்கள். "எங்களுக்கெல்லாம் தீபாவளி போனஸ் கிடையாதுப்பா" என்று சொன்னாலும் நம்ப மாட்றாங்க. அவர்களுக்கு, எங்களின் நிலமையை எப்படித்தான் புரியவைப்பது என்று தெரியவில்லை" எனக் குமுறுகிறார்கள் தமிழக போலீஸார்.

இதுகுறித்து தமிழக போலீஸார் சிலரிடம் பேசினோம், "தீபாவளி என்று வந்தாலே பொதுவாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனால், எங்களுக்கு அப்படியில்லை. பொங்கலுக்கு மட்டும்தான் போனஸ். தீபாவளிக்கு, எங்களைத் தவிர்த்து, மற்ற அரசு ஊழியர்களுக்கு அவர்கள் வாங்கும் சம்பளத்தோடு, குறைந்தது ஒரு மாதச் சம்பளத்தைச் சேர்த்து, போனஸாகக்  கொடுப்பார்கள். மத்தியரசு ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளத்தோடு 70 நாள் சம்பளத்தைச் சேர்த்து போனஸாகக் கொடுப்பார்கள்.

தமிழக போலிஸ்
  

கேட்டால், தமிழக காவல்துறையால் அரசுக்கு நிரந்தர வருவாய் இல்லை. அதனால், போனஸ் கொடுக்க முடியாது என்கிறார்கள். அப்படியென்றால், எதற்கு இந்தத் துறை. இதில் இருப்பவர்களுக்கு பண்டிகைக்கால போனஸும் கிடையாது, விடுமுறையும் கிடையாது. 24 மணிநேர பணியில் பாதுகாப்பும் கிடையாது, காப்பீட்டுத் திட்டமும் சரிவர கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால், சொந்த மாவட்டத்தில் பணிபுரியும் உரிமையும் கிடையாது. நாங்கள் பிணம் இல்லை. ஆனால், பணியின்போது சுடுகாட்டில் இருப்பதுபோலவே உணர்கிறோம். லாபம் ஈட்டித்தரும் துறைகளுக்கு மட்டுமே போனஸ் என்று ஆதிகாலத்து வரையரை வைத்துள்ளது அரசு.

அத்துறைகளுக்கு எவ்வித அச்சுறுத்துதல்களும் இல்லாமல் பாதுகாப்புத் தருவது எந்தத்துறை? ரத்தத்தை சிந்தி, உயிரைப் பணயம்வைத்து அரசைக் காப்பாற்றும் எங்களை, அற்பம் பண்டிகைக் கால போனஸ் விஷயத்தில், மற்ற அரசு ஊழியர்களிடமிருந்து விலக்கிவைப்பது எந்த விதத்தில் நியாயம். நாங்களும் மனிதர்கள்தானே. எங்களுக்கும் குடும்பம், குழந்தை குட்டிகள் இருக்கிறதுதானே. அரசு இதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று அவர்கள் குமுறுகிறார்கள்.