வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (11/10/2017)

கடைசி தொடர்பு:17:00 (23/07/2018)

"இது டெங்கு இல்லை... சாதாரண ஜுரம்தான்!" - ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் செவிலியர்கள்!

             

கரூர் மாவட்டத்திலுள்ள கள்ளப்பள்ளி கிராமத்திலிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்கள் இல்லாமல் செவிலியர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் நடப்பதாகப் பொதுமக்கள் புலம்புகின்றனர். டெங்கு பீதி மாநிலம் முழுக்கப் பரவிக்கிடக்கும் நேரத்தில், செவிலியர்களே வைத்தியம் பார்க்கும் அவலம் அச்சத்தை விதைப்பதாகக் கலங்குகின்றனர் நோயாளிகள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவில் இருக்கிறது கள்ளப்பள்ளி. இந்தக் கிராமத்திலிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அருகிலுள்ள 10 கிராம மக்களுக்குப் பயன்பட்டுவருகிறது. ஆனால், சமீப காலமாக இந்த மருத்துவமனையில் பணியில் இருக்க வேண்டிய டாக்டர்கள், சொந்த கிளினிக்கில் இருந்துகொண்டு வராமல் டிமிக்கி கொடுக்க, இந்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களே நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருவதாகப் பொதுமக்கள் புலம்புகின்றனர். இதனால்,'காய்ச்சல், சளின்னு போனா செவிலியர்கள், மாத்திரையை மட்டும் கொடுத்து அனுப்பிடுவாங்க. வேற நோய்களோடு போனால், 'உங்களுக்கு வந்திருக்கிற நோய்களைச் சரிபண்ற அளவுக்கு நாங்க பெரிய படிப்புப் படிக்கலை. அதனால், வேற ஆஸ்பத்திரிக்குப் போங்க'ன்னு விரட்டியடிக்கிறாங்க. அத்தி பூத்தாப்புலதான் டாக்டர்கள் இங்கு வேலைக்கு வருவாங்க. அப்பவும்,'பெரிய நோயா வந்தா இங்க வேண்டாம், சொந்த கிளினிக்குக்கு வாங்க'ன்னு கூப்பிட்டு, எங்களை நோகடிக்கிறாங்க' என்றார்கள், அங்கு கூடியிருந்த நோயாளிகள்.

இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நாகராஜன், "இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் உழைப்பாளிகள். படிப்பறிவு அற்றவர்கள். அதனால், டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வராமல், செவிலியர்களைவைத்து சிகிச்சை அளிக்கச் சொல்லிட்டு, தாங்கள் சொந்த கிளினிக்கில் வருமானம் பார்க்கிறாங்க. இப்போது, டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் எங்கும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், இங்க ஜூரம், சளின்னு வரும் அப்பாவி மக்களிடம், 'சாதாரண ஜுரம்தான். இந்தாங்க ஜுர மாத்திரை'னு அசால்ட்டா, அவர்களுக்கு வந்திருப்பது சாதாரண ஜுரமா இல்லை டெங்குவான்னு கண்டுபிடிக்காமலேயே செவிலியர்கள் டாக்டர்கள் போல மருந்து மாத்திரைகளைக் கொடுத்து அனுப்புறாங்க. பொதுமக்களும் விவரம் புரியாம அதை வாங்கி முழுங்கிட்டு, விதியேன்னு வீட்டுக்குப் போயிடுறாங்க. ஆனால், டெங்கு பரவும் நேரத்தில் மக்களுக்கு அரணா இருக்கவேண்டிய இந்த அரசு மருத்துவமனை டாக்டர்களே செவிலியர்களை வைத்தியம் பார்க்கச் சொல்வதன் மூலம், டெங்குவால் மக்களுக்கு பிரச்னை வர வழிசெய்கிறார்கள். இங்கு, யாரேனும் டெங்குவால் பாதிக்கப்பட்டால், அதுக்கு இந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள்தாம் முழுக்காரணம். இதுபற்றி கலெக்டர் முதல் மருத்துவத்துறை இணை இயக்குநர் வரை புகார் கொடுத்தும் பலனில்லை. இங்கு ஏதேனும் மக்களுக்கு அசம்பாவிதம் நடந்தால், முழுப்பொறுப்பையும் இந்த அரசுதான் ஏற்க வேண்டும்" என்றார் காட்டமாக.