Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெங்குக் காய்ச்சல்: சுகாதாரத்துறை சொல்வது என்ன?

டெங்கு கொசு

மிழக அரசியல் குழப்பம், சசிகலா பரோலில் சென்னை வருகை, இரட்டை இலைச் சின்னம் யாருக்கு?, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து வழக்கு என அனைத்துப் பரபரப்புச் செய்திகளையும் பின்னுக்குத் தள்ளி, தமிழகத்தில் தற்போது அச்சுறுத்தக்கூடிய செய்தியாக வலம் வருகிறது டெங்குக் காய்ச்சல் உயிரிழப்பு தொடர்பான தகவல்கள்.

இதுவரை, தமிழகத்தில் குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் என இதுவரை 100 பேர் டெங்குநோய்த் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளனர். ஆனால், அரசுத்தரப்பில் கண்காணிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறோம் என்று சொல்கிறார்களே தவிர, நோயின் தாக்கம் குறைந்தபாடில்லை. அன்றாடம் நூற்றுக்கணக்கானோர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பத்தாயிரம் பேர் வரை டெங்கு பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

ஜெ. ராதாகிருஷ்ணன்"டெங்குவால் தமிழகத்தில் தினந்தோறும் சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒருபுறம் இந்த பாதிப்புகள் இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கணிசமான எண்ணிக்கையிலானோர் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, டெங்குவிற்கான ரத்தப் பரிசோதனையில் 'பாஸிட்டிவ்' என்று வந்து விட்டாலே மக்கள் பீதியடையத் தேவையில்லை.

நோயின் தாக்கம் தொடர்பான சதவிகிதத்தைப் பொறுத்து, அதன் தீவிரத்திற்கு ஏற்ப மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கான பல்வேறு விழிப்புஉணர்வு முகாம்களையும், நேரடி டெமோவையும் தமிழக அரசின் சுகாதாரத்துறையுடன் இணைந்து, மாநகராட்சி மற்றும் அந்தந்தப் பகுதி உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம். எங்கெல்லாம் நன்னீர் தேங்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன என்பது பற்றி, சுகாதாரத்துறை அலுவலர்களும், இதர துறையின் அலுவலர்களும் சென்று மக்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள். 

இதுவரை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது, அரசின் கண்காணிப்பில் வரும் தனியார் மருத்துவமனைகளிலும் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயிலிருந்து பூரண குணம் அடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். ரத்தத்தில் தட்டை அணுக்கள் எனப்படும் 'பிளேட்ஸ்' எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறையும்போதுதான், உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். அதற்கும் ஏற்கெனவே சித்த மருத்துவ ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்ட நிலவேம்புக் கசாயம் வழங்கப்படுகிறது. நிலவேம்புக் கசாயம் என்பது, ரத்தத்தில் எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன், தட்டை அணுக்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்கக்கூடிய வல்லமை கொண்டது.

எனவே, சாதாரண காய்ச்சல் என்றாலே மக்கள் அச்சப்பட வேண்டாம். உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளையோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளையோ நாட வேண்டும். ஓரிரு நாள் காய்ச்சல் என்றவுடனேயே அது டெங்குக் காய்ச்சல் என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது. மேலும், டெங்குக் காய்ச்சல் என்பது குறிப்பிட்ட சீசனுக்கான நோய் அல்ல. நல்ல தண்ணீரில் கொசுக்கள் முட்டையிடுவதால், டெங்குவை உருவாக்கும் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, மனிதர்களை அந்தக் கொசுக்கள் கடிப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவேதான், சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், புதுப்பேட்டை, ரிச்சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் தேவையற்ற, உபயோகமில்லாத மோட்டார் உதிரி பாகங்களை இரு தினங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படிச் செய்வதால், அவர்களுக்கு மட்டுமல்ல; அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் டெங்கு நோயை ஏற்படுத்தும் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும் என்பதாலேயே இந்த ஏற்பாடு. டெங்குக் காய்ச்சல் என்பது தமிழகத்தில் மட்டுமல்ல; கேரளாவிலும், பெங்களூரிலும் கூட தற்போது அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. எனவே, மக்கள் கூடுமான வரை தண்ணீரைச் சேமித்து வைக்கும் போது, நன்றாக மூடி வைத்தல் அவசியம். தேவையற்ற பொருள்களை முற்றங்களிலோ, மொட்டை மாடிகளிலோ போட்டு வைப்பதால் அவற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக வழிவகை செய்துவிடும். எனவே, அதுபோன்ற தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement