வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (11/10/2017)

கடைசி தொடர்பு:12:30 (11/10/2017)

பூசாரி உடலில் சாமி இறங்காததால் நாட்டுப்புறப் பாடகர் அடித்துக் கொலை!

நாட்டுப்புறப் பாடகர் அகமதுகான், ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் வெகு பிரபலம். நவராத்திரி பண்டிகையையொட்டி செப்டம்பர் 27-ம் தேதி தன்டா கிராமத்தில் உள்ள கோயிலுக்கு, அகமது கானை இசை நிகழ்ச்சி நடத்த அழைத்துள்ளனர். அகமதுகான் பாடிக் கொண்டிருக்கையில், கோயில் பூசாரி ரமேஷ் , குறிப்பிட்ட பாடலை பாடச் சொல்லியுள்ளார். அப்போதுதான், கோயிலில் உள்ள சாமி தன் உடலில் இறங்கும் என்றும் அகமதுகானிடம் கூறியுள்ளார். அகமதுகானும் பூசாரி சொன்ன பாடலைப் பாடியுள்ளார். ஆனால், பூசாரியின் உடலில் சாமி இறங்கவில்லை. அகமதுகானின் பாடல் சாமியை திருப்திப்படுத்தவில்லை என்று ரமேஷ் சுதார் குற்றம் சாட்டினார்.  அதோடு, அகமதுகானைத் தாக்கியுமுள்ளார். அவரின் இசைக்கருவியையும் அடித்து உதைத்திருக்கிறார்.

நாட்டுப்புறப் பாடகர் அடித்துக் கொலை

அன்றைய தினம் இரவில்,  ஷ்யாம்ராம், தாராராம் ஆகியோருடன் அகமதுகான் வீட்டுக்குச் சென்ற ரமேஷ் சுதார், அவரை வெளியே இழுத்துவந்து  சரமாரியாகத் தாக்கியுள்ளார். அடுத்த நாள் காலை, கோயில் அருகே அகமதுகானின் உடல் கிடந்தது. இதுகுறித்து அக்டோபர் 1-ம் தேதி புகார் செய்யப்பட்டது. அக்டோபர் 5-ம் தேதி, அகமதுகானின் உடல் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. கடுமையாகத் தாக்கப்பட்டதால், அகமது கான் இறந்ததாக உடற்கூறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது.  இதுதொடர்பாக, ரமேஷ் சுதார் கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் தப்பிவிட்டனர்.

இதனிடையே, அகமதுகான் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸில் புகார் செய்ததால், தன்டா கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. இஸ்லாமிய மக்களுக்கு கிராமத்தினர் நெருக்கடி கொடுத்ததையடுத்து, தன்டா கிராமத்தில் வசித்துவந்த 20 இஸ்லாமியக் குடும்பங்கள், 10 கி.மீ தொலைவில் உள்ள பாலட் கிராமத்தில் வசிக்கும் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க