ஜெயலலிதா ஆல்பம், தனியறை தனிமை, சிக்கல் ஜாதகம்! - பரோலில் கலங்கிய சசிகலா | Jayalalithaa album, loneliness - Sasikala's prison experience

வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (11/10/2017)

கடைசி தொடர்பு:18:02 (11/10/2017)

ஜெயலலிதா ஆல்பம், தனியறை தனிமை, சிக்கல் ஜாதகம்! - பரோலில் கலங்கிய சசிகலா

சசிகலா

'முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது' என்று உறவுகளிடம் சசிகலா கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, ஐந்து நாள்கள் பரோலில் சென்னை வந்தார். தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருக்கும் சசிகலா, பெரும்பாக்கத்தில் சிகிச்சைபெறும் நடராசனைச் சந்தித்தார். மருத்துவமனையைத் தவிர வேறு எங்கும் செல்லவில்லை. வீட்டிலேயே முடங்கியிருக்கும் சசிகலா, உறவுகளிடம் மட்டுமே பேசியுள்ளார். சிறைத்துறை விதித்த நிபந்தனையால், ஆதரவாளர்கள் யாரையும் சசிகலா சந்திக்கவில்லை. தினகரனிடமும் ஜெயானந்திடமும் அரசியல் நிலவரம்குறித்து விவாதித்துள்ளார்.

சிறையிலிருந்து வெளியில் வந்த சசிகலா, விரும்பிய உணவுகளைச் சமைத்துக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமீபகாலமாக சசிகலா, அசைவ உணவுகளைத் தவிர்த்துள்ளார். இதனால், சைவ உணவுகளை ஸ்பெஷலாக சமைத்துக் கொடுத்தபோதிலும், அவற்றை சசிகலா சரிவர சாப்பிடவில்லையாம். இது, வீட்டில் உள்ளவர்களுக்கு வருத்தம். சசிகலாவுக்கென்று ஒதுக்கப்பட்ட தனியறையிலேயே நேரத்தைக் கடத்தியுள்ளார். பரோலில் வந்த முதல் மூன்று நாள்கள் அமைதியாக இருந்த சசிகலா, நேற்று உறவுகளிடம் மனம் விட்டுப் பேசியுள்ளார். இன்றுடன் பரோல் முடிவடைவதால், நேற்றிரவு நீண்ட நேரம் வீட்டிலுள்ளவர்களிடம் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

அப்போது, தினகரனின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், ஏழுமலையை பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தாக்கிவிட்டனர். அதில், ஏழுமலையின் உதடுகள் கிழிந்துவிட்டன என்று பதற்றமாகச் சொல்லியிருக்கிறார். உடனே, தினகரன், 'அவர் நலமாக இருக்கிறாரா... நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு, ஏழுமலை தாக்கப்பட்ட தகவல் சசிகலாவுக்குத் தெரிவிக்கப்பட்டதாம். அப்போது அவர், 'அதிகாரம் அவர்கள் கையிலிருப்பதால் ஆட்டம் போடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருக்கிறது' என்று ஆதங்கத்துடன் சொல்லியிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தொடர்ந்து உறவுகளுடன் நடந்த உரையாடலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. அந்தச் சமயத்தில், சசிகலாவின் முகம் மாறியுள்ளது. திடீரென உணர்ச்சிவசப்பட்ட சசிகலா, அக்காவின் ஆன்மா, அவர்களை மன்னிக்காது. பதவிக்காக இருவரும் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டனர் என்று கூறியதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்பிறகு, குடும்பம் தொடர்பான விவாதம் நடந்துள்ளது.

இன்று காலையில் எழுந்த சசிகலா முகத்தில் சோகம் அப்பியிருந்தது. பரோல் முடிந்து சிறைக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைத் தினகரன், ஜெயானந்த் ஆகியோர் செய்துள்ளனர். கடந்த ஐந்து  நாள்கள் குடும்ப உறவுகளுடன் சசிகலா நேரத்தைச் செலவிட்டபோது, அவரை உடனிந்து கிருஷ்ணப்ரியா கவனித்துள்ளார். சசிகலாவின் கோபம் முன்பைவிட குறைந்திருப்பதை உறவுகள் கவனித்துள்ளன. சிறை வாழ்க்கை, சசிகலாவின் நடவடிக்கைகள் பலவற்றை மாற்றியிருப்பதாகவும் கருதுகின்றன. சசிகலாவிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் உத்தரவு போலவே முன்பு இருக்கும். ஆனால், தற்போது அப்படியில்லை. எதையும் யோசித்து, அமைதியாகப் பேசுகிறார். அவ்வப்போது அவரது பழைய கோபம் வந்தாலும், அதை உறவுகளின் முன்பு பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

சசிகலா

ஜெயலலிதா நடித்த படங்கள், ஜெயலலிதாவுடன் இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள்கொண்ட ஆல்பங்களைப் பொறுமையாகப் புரட்டிப் பார்த்துள்ளார் சசிகலா. அப்போது, அவரது கண்கள் கலங்கியுள்ளன. பரோலில் இருந்த நாள்களில், தனிமையிலேயே அதிக நேரத்தைச் செலவழித்துள்ளார். மேலும், ஆன்மிகத்தில் அதிக அளவு ஈடுபாட்டுடன் இருக்கிறாராம். ஜெயலலிதாவின் ஜாதகத்தைச் சொன்ன விருதுநகர் புள்ளி, சசிகலாவின் ஜாதகத்தைக் கணித்து சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார். அதில், இனிவரும் காலங்கள் சசிகலாவுக்குச் சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்று சொல்லியதாகச் சொல்லப்படுகிறது. இது, சசிகலா மட்டுமல்ல குடும்ப உறவுகளையும் வருத்தமடையவைத்துள்ளது. 

சிறைக்குச் செல்லத் தயாரான சசிகலா, 'நடராசனை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். அ.தி.மு.க விவகாரத்தை அமைதியாகக் கையாளுவோம். அவசரப்பட்டதே நமக்கு ஆபத்தாகிவிட்டது' என்று குடும்ப உறவுகளிடம் தன்னுடைய மனதில் உள்ள சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசியதாக, தினகரனுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். 


டிரெண்டிங் @ விகடன்