ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு!

ராமநாதபுரத்தில், டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவ அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், உள்ளாட்சி  ஊழியர்கள் , தூய்மைக் காவலர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் களப்பணி மேற்கொண்டுவருகின்றனர். மேலும், மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு, புகை மருந்து தெளிப்பு, குடிநீர் தொட்டிகளைச் சுத்தம்செய்தல், பெருவாரியான துப்புரவுப் பணிகள், மருத்துவ முகாம்கள், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல் போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். 

டெங்கு காய்ச்சலுக்கு பலியான மாணவன் அஜீத்குமார்


இந்நிலையில், ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் அஜித்குமார் (11), டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்துவரும் சிறுவன்அஜித்குமார், கடந்த மூன்று நாள்களாக காய்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.  ஏற்கெனவே, ராமநாதபுரம் பொட்டகவயல் கிராமத்தைச் சேர்ந்த சேக் அப்துல்லா என்பவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லும் வழியில் இறந்துபோனார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!