மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்குத் தடை! | Madurai HC orders interiem stay on Nithyananda to enter adheenam

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (11/10/2017)

கடைசி தொடர்பு:14:46 (11/10/2017)

மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்குத் தடை!

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய இடைக்காலத்தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய நிரந்தரத் தடை கோரி, ஜெகதலபிரதாபன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், ''மதுரை ஆதீனம் மடம் 2,500 ஆண்டுகள் பழைமையானது. இதன் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் கடந்த 25 ஆண்டுகளாக இருந்துவருகிறார். கடந்த 2012-ல் பிடுதியில் தியான பீடம் நடத்திவரும் ராஜசேகர் என்ற நித்யானந்தா, ஆதீன மடத்துக்குள் நுழைய முற்பட்டார். சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நித்யானந்தா தன்னை ஆதீனம் மடத்தின் 293-வது மடாதிபதியாகப் பிரகடனப்படுத்திக்கொண்டார். நித்யானந்தா நியமனத்தை ரத்துசெய்யக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தோம். அந்த வழக்கில் நித்யானந்தாவை ஆதீனமாக நியமனம் செய்வதற்குத் தகுதியுடையவர் அல்ல என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நித்யானந்தா ஆதீனம் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், நித்யானந்தா மடத்துக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்தது. இந்தத் தடையை உயர் நீதிமன்றமும் உறுதிசெய்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து சட்டத்துக்குப் புறம்பாக, நீதிமன்றத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஆதீன மடத்தையும் அதன் விலை மதிப்பில்லா சொத்துகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் உயர் நீதிமன்றக் கிளையில் ஆதீன மடத்துக்குள் செல்ல போலீஸ் பாதுகாப்புக்கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மடத்துக்குள் நுழைவதற்கு நித்யானந்தாவுக்கு போலீஸ் அனுமதி வழங்கினால், தேவையில்லா சர்ச்சைகளும் சட்ட ஒழுங்குப் பிரச்னையும் ஏற்படும். இதனால், ஆதீனம் மடத்துக்குள் நுழையவும் அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு தடை விதிக்கவும், நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தைப் பாதுகாக்கவும், மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தரத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், நித்யானந்தா போலி ஆவணங்கள் தயார்செய்த குற்றச்சாட்டுகுறித்து தலைமைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை, மதுரை ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டும், இதுதொடர்பாக நித்யானந்தா தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை  நான்கு வார காலத்துக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், ஆதீனத்தின் அருணகிரிநாதர் நிர்வாகத்தில் தலையிட, நித்யானந்தா மற்றும் அவரின் சீடர்களுக்குத் தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.