வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (11/10/2017)

கடைசி தொடர்பு:18:32 (12/10/2017)

பாலாஜி முன் நித்யாவின் நண்பரை எச்சரித்த போலீஸ்! - மூன்று மணி நேர விசாரணை பின்னணி

 

நடிகர் தாடி பாலாஜி, அவர் மனைவி நித்யா, நித்யாவின் நண்பர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் மூன்று மணி நேரம் வில்லிவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் நித்யாவின் நண்பரை போலீஸார் எச்சரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் தாடி பாலாஜிக்கும் அவர் மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒருவர்மீது ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டுகளை காவல் நிலையங்கள், கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றில் கொடுத்துள்ளனர். நித்யா கொடுத்த புகாரின்பேரில் பாலாஜிமீது சாதியைச் சொல்லித் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், முன்ஜாமீன் பெற்ற பாலாஜி, வழக்கமான ஷூட்டிங்கில் ஈடுபட்டுவந்தார். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் பக்கத்தில் பாலாஜி குறித்த வீடியோ வெளியானது. இதைப்பார்த்த பாலாஜி, மனவேதனையடைந்தார். அந்த சமயத்தில் நித்யா குறித்த பல தகவல்களைத் தெரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், பாலாஜிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அண்ணாநகர் போலீஸ் துணைக் கமிஷனரிடம் பாலாஜி, புகார் கொடுக்க அதன்பேரில் நேற்று மாலை வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் பாலாஜி, நித்யா, நித்யாவின் நண்பர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் மூன்று மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடந்துள்ளது. 

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "பாலாஜிக்கும் அவர் மனைவி நித்யாவுக்கும் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது, பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர்மீது புகார் கொடுத்திருந்தார். மேலும், சமூக வலைதளத்தில் தன்னைப்பற்றி இழிவாக விமர்சிக்கும் வீடியோ குறித்த தகவலையும் எங்களிடம் தெரிவித்தார். அதன்பேரில், பாலாஜி, நித்யா, நித்யாவின் ஆண் நண்பர், சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்தோம். சப்-இன்ஸ்பெக்டரைத் தவிர மற்றவர்கள் நேற்று மாலை 6 மணியளவில் காவல் நிலையத்துக்கு வந்தனர். நித்யாவிடம் பெண் போலீஸார் விசாரித்தனர். அப்போது, அவர் பாலாஜிமீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதுபோல பாலாஜியிடம், உதவி கமிஷனர் விசாரித்தபோது, நித்யா, அவர் ஆண் நண்பர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது புகார்களை அடுக்கினார். 


நித்யாவின் ஆண் நண்பரிடம் விசாரணை நடந்தது. அப்போது, நித்யா அவருக்கு அன்பளிப்பாக செல்போன் வாங்கிக்கொடுத்த தகவல் வெளியானது. இதனால் விசாரணை அதிகாரிகள் நித்யாவின் ஆண் நண்பரை எச்சரித்துள்ளனர். இவர்கள் மூன்று பேரிடம் விசாரணை முடிந்த பிறகு, இரவு 9 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணைக்காகக் காவல் நிலையம் வந்தார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர், தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். விசாரணையின்போது, பாலாஜியின் மகள் போஷிகாவிடம் விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் பெண் போலீஸார், இன்று போஷிகாவிடம் விசாரித்தனர். அவர், சொன்ன தகவல்கள் இந்த வழக்கின் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன'' என்றனர். 

 விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாலாஜி குற்றம்சாட்டிய சப்-இன்ஸ்பெக்டர், நித்யாவுடன் பேசியதற்கான போன் உரையாடல் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில், நித்யாவுக்கும் சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. போன் உரையாடலின் முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் நித்யாவைத் திட்டுகிறார். அதற்கு நித்யா, நன்றி என்று சொல்கிறார். மேலும், போன் உரையாடலில் ஒருவரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்தவுள்ளோம். மேலும், ஃபேஸ்புக்கில் வெளியான வீடியோ குறித்து விசாரித்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்