Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'குட்கா விவகாரத்தில் திடீர் திருப்பம்!' - எப்.ஐ.ஆரில் சிக்கிய போலீஸ் அதிகாரிகள்

 குட்கா

Chennai: 

Pic credits ANI

தமிழக போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும், ஆளுங்கட்சி அமைச்சருக்கும் சிக்கலை ஏற்படுத்தியது குட்கா விவகாரம். குட்கா விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்துவரும் சூழ்நிலையில், 17 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் அந்த 17 பேர் என்ற கேள்விகள் குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களிடையே எழுந்துள்ள நிலையில், முன்னாள் தலைமைச் செயலாளர், முன்னாள் டி.ஜி.பியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

 குட்கா விவகாரத்தின் ஆரம்பக்கதை இது!

பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருள்கள் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவைகள். இத்தகைய போதைப் பொருள்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தங்குத் தடையின்றி போதைப் பொருள்கள் விற்கப்பட்டன. பெயரளவுக்கு சோதனை நடத்தி சிலரை கைதுசெய்வது போலீஸாரின் வாடிக்கையாக இருந்தது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல குட்கா நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் டைரி ஒன்று வருமானவரித்துறையினரிடம் சிக்கியது. அதில், யார், யாருக்கெல்லாம் மாமூல் கொடுக்கப்பட்ட விவரம் இருந்தது. அந்தப்பட்டியலில் சென்னையில் பணியாற்றும் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகள், உயரதிகாரிகளின் பெயர்களுடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்த தகவல்களும் இருந்தன.

மேலும், அந்த டைரியில் அமைச்சர் ஒருவரின் பெயரும் இடம்பிடித்திருந்ததாக தகவல் வெளியாகியது. குட்கா நிறுவனத்திடம் மாமூல் வாங்கியவர்கள் கதிகலங்கினர்.சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் குறித்து விசாரணை நடத்த  ஆதாரத்துடன்கூடிய பைலை தமிழக அரசுக்கு அனுப்பியது. ஆனால், அந்த பைல் கிடப்பில் போடப்பட்டது. குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அறிக்கை வெளியிட்டன. அதன்பிறகும் தமிழக அரசு, ஆர்வம் காட்டவில்லை. இந்தச்சமயத்தில் தலைமைச் செயலகத்திலிருந்த குட்கா விவகார ஆவணங்கள் மாயமாகின. இது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கமிஷனர் எழுதிய கடிதம் 

இந்தச்சூழ்நிலையில் கடந்த டிசம்பர் 2016ல் அப்போதையை தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அந்தச் சோதனைக்குப்பிறகு குட்கா விவகாரம் மீண்டும் எரிமலையாக வெடிக்கத் தொடங்கியது. இதனால், அப்போதைய போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், தமிழக அரசுக்கு குட்கா விவகாரத்தில் மாமூல் வாங்கிய அதிகாரிகள் குறித்த விவரங்களை கடிதமாக உள்துறைக்கு எழுதினார். அதன்பிறகும் குட்கா விவகாரத்தில் பெரியளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை அதிகாரியாக  ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ். என்பவரை நீதிமன்றம் நியமித்தது. அதன்பிறகு விசாரணை சூடுபிடித்தது. கடந்த 27-ம் தேதி எப்.ஐ.ஆர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டசபை கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் குட்கா, பான்பராக் போன்ற போதை பொருள்களைக் கொண்டுவந்தனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தடை செய்யப்பட்ட பொருள்களை சட்டசபைக்கு கொண்டு வந்த ஸ்டாலின் உட்பட தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு விளக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டது தனிக்கதை. இதனால், குட்கா விவகாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளானது. 
 
 எப்.ஐ.ஆரில் யார், யார் ?

 எப்.ஐ.ஆரில் வணிகவரித்துறை உதவி கமிஷனர், போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மத்திய கலால்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் என 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குட்கா நிறுவனத்தைச் சேர்ந்த மாதவரா மற்றும் அவரது கூட்டாளிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதோடு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

குறிப்பாக செங்குன்றம் பகுதியில் பணியாற்றிய போலீஸ் உதவி கமிஷனர்கள் பதற்றத்தில் உள்ளனர். அவர்களின் சிலரது பெயர்கள் எப்.ஐ.ஆரில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்.ஐ.ஆரில் இடம் பிடித்தவர்களிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. இதனால், எப்.ஐ.ஆரில் உள்ள விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை. 

முன்னாள் தலைமைச் செயலாளர், முன்னாள் டி.ஜி.பியிடம் விசாரணை 
 
 இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம். "குட்கா விவகாரத்தை விசாரிக்க இரண்டு டீம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விஜிலென்ஸ் கமிஷனர் மேற்பார்வையில் கூடுதல் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் விசாரணை அதிகாரியாக உள்ளார். இவரது தலைமையிலான டீம் மாமூல் வாங்கியவர்கள் குறித்து விசாரித்துவருகிறது. இன்னொரு டீம், தலைமைச் செயலகத்தில் காணாமல் போன பைல் தொடர்பாக விசாரணை நடத்திவருகிறது. 

குட்கா நிறுவனத்தைச் சேர்ந்த மாதவராவ் மற்றும் அவரது கூட்டாளிகள் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் முதற்கட்டமாக 17 பேர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. மேலும், குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படும். ஏனெனில் போலீஸ் உயரதிகாரிகள், உயர்பதவியிலிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் உரிய ஆதாரமில்லாமல் விசாரணை நடத்தமுடியாது. ஆதாரங்களை சேகரித்துவருகிறோம். தகுந்த ஆதாரங்கள் கிடைத்தவுடன் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். 

இதற்கிடையில் குட்கா விற்க மாமூல் பெற்ற போலீஸ் அதிகாரிகள் பட்டியல் எங்களிடம் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக ஜார்ஜ் ஐ.பி.எஸ். எழுதிய கடிதமும் உள்ளது. இதனால், அப்போது டி.ஜி.பியாக இருந்தவரிடம் சில கேள்விகளை கேட்க முடிவு செய்துள்ளோம். அதுபோல, தலைமைச் செயலகத்தில் குட்கா தொடர்புடைய ஆவணங்கள் மாயமானது குறித்து அப்போதிலிருந்த தலைமைச் செயலாளரிடமும் விசாரிக்கவுள்ளோம். விசாரணை நடப்பதால் வெளிப்படையாக சில தகவல்களைச் சொல்ல இயலவில்லை என்றனர். 

 சிக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், அமைச்சர் 

 குட்கா விவகாரத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிக்குவார்கள் என்று உள்விவர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு எதிராகப் பல தகவல்களை விசாரணை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் போலீஸ் கமிஷனராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட மாமூல் தொகை விவரங்கள் சிக்கியுள்ளன. அதன் அடிப்படையில் அவரிடமும் விசாரணை நடத்த மேலிட சிக்னலுக்காக காத்திருக்கின்றனர் விசாரணை அதிகாரிகள். 
அடுத்து, இன்னொருவர், தமிழக காவல்துறையில் உயர்பதவியில் இருக்கிறார். அவர்மீது எப்படி விசாரணை நடத்தலாம் என்ற ஆலோசனை நடந்துவருகிறது. மேலும், தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள ஒருவர் மீது ஏற்கெனவே வருமானவரித்துறையில் விசாரணை நிலுவையில் இருக்கிறது. அவருக்கும் குட்கா விவகாரத்தில் தொடர்புள்ளதால் அவரும் விசாரணை அதிகாரிகளின் சந்தேக வளையத்தில் இருக்கிறார். சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, அமைச்சரை குறி வைத்து, காயை விசாரணை அதிகாரிகள் நகர்த்திவருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர் மீதும் குட்கா வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகமொத்தத்தில் குட்கா விவகாரம் ஆளுங்கட்சிக்கும், தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement