Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“அபராதம் அப்புறம்... அறிவுரை முதலில்!”- விபத்தைத் தவிர்க்கும் எஸ்.பி-யின் வியூகம்

சந்தோஷ் ஹதிமானி

'ஹெல்மெட் அணியாமல் போனால், போலீஸ் பிடித்துவிடும்' என பொதுமக்கள் அஞ்சுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காஞ்சியில் போலீஸாரே அஞ்சுகிறார்கள்! அங்கு பொதுமக்கள் ஹெல்மெட் உபயோகிக்கிறார்களோ இல்லையோ... போலீஸார் தவறாமல் ஹெல்மெட் பயன்படுத்துகின்றனர். காரணம் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி. சாலை விபத்துகளில் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் ஹெல்மெட் விவகாரத்தில், கறார் ஆபிஸராக இருக்கும் சந்தோஷ் ஹதிமானி, காஞ்சி மாவட்டத்தில் பணியில் சேர்ந்ததும் செய்த முதல்வேலை, 'காவலர்கள் இருசக்கரவாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணியவேண்டும்' என வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததுதான். 

'கடந்த 8 மாதங்களுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி ஆக பொறுப்பேற்றார் சந்தோஸ் ஹதிமானி. அன்று முதல் இன்றுவரை சாலைவிபத்துகளைக் குறைக்கும் விஷயத்தில் மிகுந்த கவனம் எடுத்து வருகிறார்' என்கிறார்கள். அதில், முதல்வேலையாக 'காவலர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும்' என்ற உத்தரவு. காவலர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் இந்த உத்தரவைப் பின்பற்றவேண்டும் என்றதோடு சாலைகளில், காவலர்கள் யாராவது ஹெல்மெட் அணியாமல் செல்வதைப் பார்த்தால், அங்கேயே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் எனவும் கறாராகச் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். அப்படி கண்ணில் சிக்கிய சிலரிடம், 'இனி ஹெல்மெட் போடாமல் பயணிக்கமாட்டேன்' என எழுதியே வாங்கிக்கொண்டுள்ளார் என்கிறார்கள்.

போலீசுக்கு இப்படியொரு உத்தரவு என்றால், பொதுமக்களிடம் ஹெல்மெட் விவகாரத்தில் அவரது அணுகுமுறை இன்னும்  வித்தியாசமானது. தனது வழக்கமான பணிகள் முடிந்ததும் மஃப்டியில் காஞ்சிபுரம் நகரிலோ அல்லது மாவட்டத்தின் எந்தப் பகுதியிலோ மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலை அல்லது  சந்திப்புப் பகுதிக்கு சில காவலர்களுடன் சென்றுவிடுகிறார். பெரும்பாலும் திருமண மண்டபம் அல்லது பள்ளி மைதானம் அல்லது குறைந்தது 50 பேர் அமர வசதியான ஒரு பொது இடம் உள்ள சந்திப்பாகத் தேர்வு செய்து, அந்த வழியே வருபவர்களில் ஹெல்மெட் போடாதவர்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அதிக சுமை ஏற்றிவரும் வாகன ஓட்டிகள் என பலரையும் அவரே பிடிப்பார். குறைந்தது 50 பேர் சேர்ந்ததும் உடனடியாக அந்த பகுதியின் உள்ளூர் காவல்துறை மூலம் அவர்களை மேற்சொன்ன ஏதாவது ஒரு இடத்தில் குழுமச் செய்து, ஹெல்மெட் போடாததால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து அவர்களிடையே உரையாற்றுகிறார். சக அதிகாரிகளையும் பேச வைக்கிறார். 

ஹெல்மெட்

பார்வையாளர்களில்  சாலை விபத்தில் தங்கள் உறவினர், நண்பர்களை இழந்தவர்கள் யாரேனும் இருந்தால் அந்த விபத்து குறித்து அவர்களையும் கூற வைக்கிறார். விபத்தினால் அந்தக் குடும்பம் தற்போது என்னென்ன சிரமங்களை சந்தித்துவருகிறது என்பது இதில் முக்கிய இடம்பெறுகிறது. இதன்மூலம் சின்ன கவனக்குறைவு எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என நேரடியாக அவர்களுக்கு உணரவைக்கிறார். கூட்டம் முடிந்ததும் 'மறுமுறை காவலர்களிடம் சிக்கினால், அபராதம் விதிக்கப்படும்' என்ற எச்சரிக்கையுடன் அவர்களை அனுப்பிவைக்கிறார். 

தவறாமல் அவர்களிடம் சாலை விபத்து குறித்த விழிப்பு உணர்வு நோட்டீசுகள் தரப்படுகின்றன. எஸ்.பி-யின் இந்த வித்தியாசமான அணுகுமுறை மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹெல்மெட் இல்லாமல் செல்பவர்களைப் பிடிக்கும் பணியில் இருப்பவர்கள் ஹெல்மெட் போடாமல் இருந்தால் எப்படி? எனவே, காவல்துறையினரும் கட்டாயம் ஹெல்மெட் போடவேண்டும் என்ற கறார் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் எஸ்.பி. இதனால் பொதுமக்களைப்போலவே காவல்துறையினரும் ஹெல்மெட் அணிந்து செல்வதைக் காஞ்சியில் சர்வசாதாரணமாகக் காண முடிகிறது.

எஸ்.பி-யின் இந்த அதிரடி உத்தரவு நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிற அதேவேளை சில எதிர்மறையான விஷயங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய உள்ளூர் பிரமுகர் ஒருவர், ''எஸ்.பி-யின் நோக்கம் சரியானதுதான். ஆனால், அவரின் உத்தரவைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் அத்துமீறி நடந்துகொள்கிறார்கள்.

ஹெல்மெட்உதாரணத்துக்கு காஞ்சிபுரம் ரயில்வே நிலையத்துக்கு இந்தப் பக்கம் தாலுகா போலீஸ் மடக்கி அபராதம் விதிக்கிறது. ரயில்வே கிராசிங் தாண்டிச் சென்றால், கொஞ்ச துாரத்தில் விஷ்ணு காஞ்சி காவல்நிலைய எல்லை என்பதால் அவர்களும் மடக்கி திரும்பவும் அபராதம் விதிக்கின்றனர். அதைத்தாண்டி சில கி.மீ தூரத்தில் வாலாஜாபாத் காவல் நிலைய எல்லை வருகிறது. அவர்களும் தங்கள் பங்குக்கு  அபராதம் விதிக்கின்றனர். கட்டடப் பணியாளர் போன்ற வேலை செய்பவர்கள் எந்நேரமும் ஹெல்மெட்டோடு சுத்திக்கொண்டிருக்கமுடியுமா... இப்படி தினந்தோறும் அவர்கள் செல்கிற வழியில் கேம்ப் அலுவலகம் போல நிரந்தரமாக போலீஸார் நிற்கின்றனர். வாங்குகிற கூலியில் பாதியை அபராதமாகவே கட்டிவிட்டுப் போகவேண்டியதாக இருக்கிறது.

அரசு டாஸ்மாக் கடையை நடத்துகிறது. அந்தக் கடையிலிருந்து கூப்பிடு தூரத்திலேயே காவலர்கள் நின்றுகொண்டு குடித்துவிட்டு வருபவர்களை மடக்கி அபராதம் விதிக்கின்றனர். குடிப்பது தவறுதான். ஆனால், உடல் உழைப்பாளர்கள்  மாலை வரை உழைப்பதனால், சோர்ந்துபோயுள்ளனர். தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள குடிப்பது சகஜமான விஷயம். அப்படிப்பட்டவர்களையும் ஒரு நாளில் கண்ட இடங்களில் பிடித்து அபராதம் விதித்தால் அது என்ன நியாயம்...?

எஸ்.பி-யிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இப்படி பிடிபடுபவர்களைப் போலீஸார் கண்டபடி திட்டுவதும் நடக்கிறது. விபத்தை தவிர்க்கிறேன் என இப்படி பொதுமக்களை திண்டாட்டத்துக்குள்ளாக்கிவருகிறது காவல்துறை. இன்னொரு பக்கம் இப்படி பிடிபடுபவர்களின் லைசென்ஸையும் நீக்கம் செய்கிறார்கள்.

பல இடங்களில், தமிழ்நாடு சிறப்புக் காவல்படையைச் சேர்ந்தவர்களும் இப்படி ஹெல்மெட் போடாதவர்களை விரட்டிப்பிடிக்கிறார்கள். அபராதம் விதிப்பதை மீறி காவல்துறை அதிகாரிகள் போல பொதுமக்களை கண்டபடி பேசுவது வண்டியின் சாவியைப் பறித்துக்கொண்டு  அலைக்கழிப்பது போன்ற செயல்களிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர். சட்டம் ஒழுங்குப் பணியில் ஈடுபட  இவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்?  இப்படி எஸ்.பி-யின் உத்தரவால் நிறைய அத்துமீறல்கள் நடந்துவருகின்றன. இதற்கென ஒரு கூட்டம் நடத்தி எஸ்.பி இந்தப் பிரச்னையைத் தீர்க்க முயலவேண்டும்” என்றார். 

இதுகுறித்து அறிய எஸ்.பி-யைத் தொடர்புகொண்டபோது தற்போது வெளிமாநிலம் ஒன்றுக்கு சென்றிருப்பதாகக் கூறினார்.  மாவட்டத்தின் மற்றொரு அதிகாரியிடம் பேசினோம். “ காஞ்சி மாவட்ட எஸ்.பி-யாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றபோதே மாவட்டத்தில் கடந்த கால விபத்துகுறித்த புள்ளிவிபரங்களை ஆராய்ந்தார் எஸ்.பி. அந்தப் புள்ளிவிபரங்கள் அவருக்கு அதிர்ச்சி தந்ததால், மாவட்டத்தை விபத்தில்லா  மாவட்டமாக மாற்றவேண்டும் என அப்போதே உறுதி எடுத்துக்கொண்டார். அதற்குரிய நடவடிக்கைகளில் ஒன்றாகத்தான் இப்படி விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறார். வெறுமனே இதை ஒரு கடமையாகச் செய்யாமல், உளப்பூர்வமாகச் செய்துவருகிறார்.  சில மாதங்களுக்கு முன் எஸ்.பி தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரில் இருசக்கரவாகனத்தில் ஒருவர் தன் 3 வயது மகளுக்கும் ஹெல்மெட் அணிவித்து அழைத்து வந்தார். ஆச்சர்யமடைந்த எஸ்.பி, அங்கேயே அவர்களை நிறுத்தி போன் நெம்பரை கேட்டுப்பெற்றார். சமீபத்தில் அந்தக் குடும்பத்தை வரவழைத்து சால்வைப் போட்டு பாராட்டியதோடு குழந்தைக்குப் பரிசும் கொடுத்து அனுப்பிவைத்தார். அப்படி ஹெல்மெட் விவகாரத்தில் ஆர்வம் காட்டிவருகிறார். விபத்துகளில் பெரும்பாலும் தலையில் அடிபட்டு இறப்பதே அதிகம் நிகழ்வதால் ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தி வருகிறார். பொதுமக்களுக்கு அறிவுரை சொல்லும் முன் தான் அதைப் பின்பற்றவேண்டும் என்றுதான் போலீஸாரையும் ஹெல்மெட் போட வலியுறுத்துகிறார். அபராதம் இதில் இரண்டாம்பட்சம்தான்... விபத்தினால் ஏற்படப்போகும் விளைவுகளை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும் என்பதே எஸ்.பி-யின் நோக்கம்.  அதனால்தான் விபத்து என்பது ஒருவரது மரணம் மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி என மக்களிடம் எடுத்துச்சொல்ல எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

பொதுமக்கள் ஓரிடத்தில் அபராதம் கட்டியவர்கள் அடுத்தக் காவல்நிலைய எல்லையில் பிடிபடும்போது அதைச் சொன்னால் விட்டுவிடவேண்டும் என கறாராக மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அதனால், அந்தப்பிரச்னை எழவாய்ப்பில்லை. போலீஸ் பிடிப்பதாகச் சொல்பவர்கள், ஹெல்மெட் அணியாமல் செல்வதும், குடிபோதையில் வண்டியை ஓட்டுவதும் சட்டப்படி குற்றம் என்பதையும் உணரவேண்டும். டாஸ்மாக் கடை விவகாரம் அரசியல். அதுபற்றி எதுவும் சொல்லமுடியாது. நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம். கடையில் மது வாங்கிவிட்டு வீட்டுக்கு செல்லவேண்டியதுதானே... அரசு கடை நடத்துகிறது என்பதற்காக குடித்துவிட்டு வண்டி ஓட்டி விபத்தை ஏற்படுத்தலாமா என்ன?! பெரும்பாலான விபத்துகள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டவைதான் என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களின் லைசென்ஸை ரத்துசெய்வது ஆர்.டி ஓ அலுவலகத்தின் நடவடிக்கை. அரசு உத்தரவுப்படி நாங்கள் பரிந்துரைக்கமட்டுமே செய்கிறோம்” என்றார்.

ஒரு விபத்தில் இழப்பது ஒரு உயிரை மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் நிம்மதியும்தான் என்பதை பொதுமக்கள்தான் உணரவேண்டும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement