"மனித உரிமை ஆணைய உறுப்பினர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்!" - ஹென்றி திபேன்

ஹென்றிதிபேன்

"தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு உறுப்பினர்கள் நியமனம் செய்வது தொடர்பாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கு முழுமையான தகவல்களை முறையாகத் தெரிவிக்காமல் தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பக்கூடாது" என்று மனித உரிமைப்போராளி ஹென்றி திபேன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசிய ஹென்றி திபேன், ''மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1998, பிரிவு 22-ன் படி, ஏற்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் தேர்வுக்குழுவில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆளும்கட்சி சார்பின்றி சுதந்திரமாகச் செயல்படக்கூடியவராவார். ஆனால், 'எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்காமல், கடந்த வாரம் தேர்வுக்குழு கூடியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது' என்று அனைத்திந்திய என்.ஜி.ஓ. ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய, மாநில மனித உரிமை அமைப்புகளில் பங்காற்றிவரும் தனிநபர் அமைப்பான AINNI  தெரிவித்துள்ளது. மனித உரிமை ஆணைய உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் பற்றிய முழு விவரத்தையும் தெரிவிக்காமல், அவர்களின் பெயர்களை மட்டும் அனுப்பினால் அவர்களுடைய தகுதிகள் பற்றி எப்படித் தெரிந்துகொள்வது? விண்ணப்பதாரர்களின் தகுதி தெரியாமல் எவ்வாறு தெரிவு செய்வது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தற்காலிகத் தலைவராக மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒருவர் 9.1.2012 முதல் 24.11.2014 வரை, 26 மாதங்கள் நீடித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு உடனடியாக தலைவர் பதவிக்கு நிரந்தரமாக ஒருவரை நியமனம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு 16.11.2014 அன்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நீதிபதி மீனா குமாரியை நியமனம் செய்தது. ஆனால், மாநில மனித உரிமை ஆணையத்தின் இரு உறுப்பினர்கள் பணியிடம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இன்றுவரை காலியாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, ஆணையத்தின் தலைவரே எல்லாப் பணிகளையும் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

 

இந்தப் பின்னணியில் ஆணையத்தின் உறுப்பினர் பதவி ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருப்பது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நலவழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து '13.10.2017-க்குள், ஆணையத்தின் இரு உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்' என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

 

உடனே தமிழக அரசு, அவசரகதியில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை கடந்தவாரம் கூட்டியது. தமிழக முதல்வர், மாநில உள்துறை அமைச்சர், சபாநாயகர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என நான்கு உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக்குழுவில், இரண்டு பேர் மட்டுமே கலந்துகொண்டனர். தமிழக முதலமைச்சரே உள்துறையையும் கவனிப்பதால் அவரும், சபாநாயகரும் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கு முறையாக முழுவிவரத்தை அளிக்காததுடன், போதிய கால அவகாசம் கொடுக்காததால் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ள மறுத்துவிட்டார்.

 

இதைக்கவனத்தில் கொண்டு, தமிழக தலைமைச் செயலாளர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருக்கு, மனித உரிமை ஆணைய உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் முழு விவரங்களும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். போதிய கால அவகாசம் அளித்து, நேர்மையான முறையில், வெளிப்படைத் தன்மையுடன் மனித உரிமைகள் சட்டத்துக்கு உட்பட்டு இரு உறுப்பினர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். மாறாக, சட்டத்துக்குப் புறம்பாக தமிழக அரசு உறுப்பினர்களை நியமனம் செய்து, ஆளுநரின் ஒப்புதலைப் பெற முயற்சித்தால் அதை ஆட்சேபித்து சட்ட நெறிமுறைகளுக்குட்பட்டு AINNI மூலமாக நீதிமன்றத்தில் முறையிட்டு நியாயமான முறையில் உறுப்பினர்களை நியமனம் செய்ய வலியுறுத்தப்படும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!