வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (11/10/2017)

கடைசி தொடர்பு:18:30 (12/10/2017)

“கமல் சார் பாராட்டினதும் ஆசிர்வதிக்கப்பட்டவளா உணர்ந்தேன்” - 'ஐயமிட்டு உண்' ஃபாத்திமா ஜாஸ்மின்!

ஃபாத்திமா ஜாஸ்மின்

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த பல் சீரமைப்பு மருத்துவர் ஐசா ஃபாத்திமா ஜாஸ்மின் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். 'ஐயமிட்டு உண்' என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள் மத்தியில் சேவை மனப்பான்மையைக் கொண்டு சென்றவர். இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் இவர் கொண்டு வந்த இந்த ஃப்ரிட்ஜ் கான்செப்ட் பற்றி நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடனில் எழுதும் 'என்னுள் மையம் கொண்ட புயல்' தொடரில் இப்படி சொல்லியிருக்கிறார். “நமக்கு ஐஷா போன்றோர்தான் தாய். அரசு செய்ய வேண்டிய வேலையை ஐஷா போன்ற உண்மையான அம்மாக்கள்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள். வாழ்த்துகள் ஐஷா”. 

இப்படி சாதனையாளர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவராலும் பாராட்டப்பெறும் ஐசாவின் அடுத்தகட்ட முயற்சியாக வரவிருக்கிறது “ஹேப்பி ப்ளேட் சென்னை”. என்ன இது புதுசா இருக்கு என்பவர்களுக்கு ஐசாவே விளக்குகிறார்.

ஐயமிட்டு உண் ஷாப் முன்பாக ஃபாத்திமா

ஐயமிட்டு உண் என்ற பெயர்ல, இருக்குறவங்க இல்லாதவங்களுக்கு கொடுத்து உதவுறதுக்காக ஃபிரிட்ஜ்' கான்செப்ட் கொண்டு வந்தோம். ஆரம்பத்துல இது எந்த அளவுக்கு மக்கள்கிட்ட போய்ச் சேரப்போகுதுன்னு கொஞ்சம் தயங்கினேன். ஆனா, மக்கள் மீது நான் வெச்ச நம்பிக்கை வீண்போகல. இந்தத் திட்டத்தை கொண்டுவந்து இன்னும் ரெண்டு மாசம் கூட முழுசா முடியல. அதுக்குள்ள 150 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தானாவே முன்வந்து நாங்களும் உங்களுக்கு உதவுறோம்னு சொன்னாங்க. சிலர் கல்யாண வீடுகளுக்கு நேரடியா போய் அங்க சாப்பாடு வேஸ்ட் ஆச்சுன்னா எங்களை கான்டாக்ட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு வர்றாங்க. வேறு சிலர் ஃபுட் வேஸ்ட் பத்தின விழிப்பு உணர்வு வால் போஸ்டர் அடிச்சு தர்றாங்க. இன்னும் சிலர் எங்கெல்லாம் ஃபுட் வேஸ்ட்டா இருக்குதோ அதைப் போய் வாங்கிட்டு வர்றதும், வேறு எங்கெல்லாம் இந்த ஃபிரிட்ஜ்  வைக்கலாம்ங்கிற இடத்தையும் செலக்ட் பண்ணிட்டு வர்றாங்க. இப்படி அவங்களுக்குள்ளாகவே குழுக்களா பிரிஞ்சிக்கிட்டு தன்னார்வத்தோட செயல்பட ஆரம்பிச்சிருக்காங்க. 

ஒருபக்கம் சென்னையில இருக்குற இவங்க நேரடியா எனக்கு உதவி பண்ணிட்டு இருக்கும்போது, இன்னொருபக்கம் வெளியூர்கள்ல இருக்குறவங்க போன்ல என்ன கான்டாக்ட் பண்ணி நாங்களும் உதவி பண்ண ஆசைப்படுறோம். நேர்ல வர முடியாட்டாலும் பணமா உங்களுக்கு அனுப்பி வெச்சிடுறொம்னு சொல்றாங்க. இதையெல்லாம் பார்க்கிறப்ப ரொம்பப் பெருமையா இருக்கு. அதோட, கமல் சார் ஆனந்த விகடன்ல எழுதுற 'என்னுள் மையம் கொண்ட புயல்'  தொடரோட முதல் எபிசோட்லயே என்னைப் பத்தி சொல்லியிருக்காங்க. இது எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய வாழ்த்து. ஒரு பெரிய அவார்டு கிடைச்சதாத்தான் நான் ஃபீல் பண்ணினேன். விகடன் வாங்கிப் படிச்சதுமே ஆசிர்வதிக்கப்பட்டவளா உணர்ந்தேன். ” என்று சொல்லிக்கொண்டிருந்தவரிடம் “ஹேப்பி ப்ளேட் சென்னை” பற்றிக் கேட்டோம். 

ஐயமிட்டு உண் ஷாப்பில் துணி எடுக்கும் நபர்

“வர்ற அக்டோபர் 16 உலக உணவு தினம். அதனாலதான், அந்த நாளை உணவு குறித்த விழிப்புஉணர்வு நாளா கொண்டாடனும்னு திட்டம் வெச்சிருக்கோம். இந்த மாசத்துல யாரெல்லாம் வீட்டுல சாப்பிடுற உணவுகளை வீணாக்காம சாப்பிட்டு முடிச்சு, பிளேட்டை க்ளீனா வெச்சிருக்காங்களோ அவங்க சார்பா ஏழைகளுக்கு சமைப்பதற்கான உணவுப்பொருள்கள் அடங்கிய பொட்டலம் கொடுக்கப் போறோம்” என்று ஐசா சொல்லும்போதே ஆச்சர்யமாக இருந்தது. இது எப்படி சாத்தியம்னு நாம கேட்பதற்குள்ளாக அவரே முந்திக்கொண்டு,

“இது எப்டிங்க முடியும்னு நீங்க கேட்கலாம், அதுக்குத்தான் நாங்க ஒரு ஐடியா வெச்சிருக்கோம்.  நீங்க எப்போ சாப்பிட்டு முடிச்சாலும், உடனே உங்க சாப்பாட்டு தட்டை ஒரு போட்டோ எடுத்து அதை 'ஐயமிட்டு உண்' என்கிற எங்களோட பேஸ்புக் பேஜ்ல அப்லோட் பண்ணினா போதும். இதை யார்வேணும்னாலும் பண்ணலாம். உணவுங்கிறது எவ்வளவு முக்கியம், அதை நாம வீணாக்கக்கூடாது, அந்த உணவில்லாம எத்தனை பேர் கஷ்டப்படுறாங்கங்கிற உணர்வை எல்லார்கிட்டேயும் கொண்டு போக நினைக்கிறோம்.

உணவு பத்தின விழிப்புஉணர்வைக் கொண்டு போறதுக்கான முயற்சிதான் இது. நீங்க இப்படி போட்டோ அப்லோட் பண்ணும்போது சமூக வலைதளத்தை யூஸ் பண்றவங்ககிட்ட ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அதுமட்டுமல்லாம, சாலையோரம் வாழுற மக்களுக்கு அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை, சாம்பார் பவுடர், ரசம் பவுடர் கூடவே சமையலுக்குத் தேவையான பொருள்கள் அடங்கிய பொட்டலத்தையும் கொடுக்குறதா இருக்குறோம். தீபாவளிக்கு முன்பே இதைச் செய்யணும்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கோம். நிச்சயம் இந்த முயற்சி சக்சஸ் ஆகும்'' என்று சொல்லும் ஐசாவுக்கு ஆயிரம் பூங்கொத்து. 


டிரெண்டிங் @ விகடன்